மயிலம்,: அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 பேரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 2006ல் திண்டிவனத்தில் உள்ள வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரை தாக்கி கொல்ல முயற்சி செய்தது. இதில் காருக்கு அடியில் புகுந்து அவர் உயிர் தப்பினார்.
ஆனால் அவரது உறவினரும், அதிமுக தொண்டருமான முருகானந்தம் கொல்லப்பட்டார். கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பாமகவை சேர்ந்த சீனுவாசன், கருணாநிதி, குமரவேல் பிரதீபன், ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ல் இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, 21.11.2014ல் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் பாமகவை ேசர்ந்த 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டதில் 5 பேர் இறந்துவிட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2025 ஏப்ரல் 28ம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஜூன் 12ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக், தீர்ப்பு தேதியை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தபோது அன்றைய தினம் மீண்டும் ஜூன் 25க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கின் தீர்ப்பு நேற்று திண்டிவனம் நீதிமன்ற எண் 1இல் விசாரனைக்கு வந்தது. இதில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.