சென்னை: சுங்கக் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் 5% முதல் 12% வரை அதாவது ரூ.15 லிருந்து ரூ.150 வரை சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுங்கச்சாவடிகளில் அவ்வப்போது சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து தனது எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றது.
காரணம் போக்குவரத்து தொழிலுக்கும், பயணிகள் போக்குவரத்திற்கும், வணிகர்களுக்கும் தொடர்ந்து பயணம் சம்பந்தமான தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும், இது ஒரு மிகப்பெரும் சுமையாக அமைவதோடு, தொடரும் சுங்கக் கட்டண உயர்வு அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களின் மீது விலைவாசி உயர்வுக்கும், நுகர்வோர்களுக்கும் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டே அனைத்து தரப்பினர் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர்ந்து சுங்கக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது. இது தவிர, காலாவதியான சுங்கச் சாவடிகளையும் அகற்றிடக்கோரி பேரமைப்பு வலியுறுத்தி வருகின்றது. தமிழக சுங்கச் சாவடிகளில் மட்டுமே ஏறத்தாழ ஆண்டுக்கு ரூ.4,200 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் கட்டண உயர்வு என்பது, பொதுமக்களின் மீது சுமத்தப்படும் பெரும் சுமை என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு, உடனடியாக இந்த சுங்கக் கட்டண உயர்வை நிறுத்தி வைத்திட வேண்டும்.