மதுரை: வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பிரணவ் ஜுவல்லரி வாடிக்கையாளர்களிடம் ஏராளமான தங்கத்தை முதலீடாக பெற்று மோசடி செய்துள்ளது. பழைய நகைக்கு பதில் புதிய நகை தருவதாகக் கூறி பிரணவ் ஜுவல்லரி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பழைய நகையை டெபாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதே எடையுள்ள புதிய நகையை தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர். நகை டெபாசிட் செய்யப்படும் காலத்தில் 9% வட்டி, 3 கிராம் தங்கக் காசு தருவதாகக் கூறியும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. நகையை டெபாசிட் செய்து ஒரு வருடம் கழித்து புதிய நகை கேட்டபோது தராமல் ஏமாற்றியதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் திடீரென கடையை மூடிவிட்டு தலைமறைவான உரிமையாளர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் அளித்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சி, மதுரையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.