Tuesday, March 25, 2025
Home » சாபம் நீக்கி சீரான வாழ்வு தரும் திருக்கண்டியூர்

சாபம் நீக்கி சீரான வாழ்வு தரும் திருக்கண்டியூர்

by Porselvi

சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் தம் சூலத்தால் பிரம்மன் சிரத்தைக் கண்டனம் செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதீகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 12வது பிரம்மன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் – கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரம்மன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர்முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரம்மன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்துவந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.அட்டவீரட்டத் தலங்களுள்ளும், சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.‘‘சாதாதாப’’ முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ‘ஆதிவில்வாரண்யம்’ என்றும் பெயர். பிரமகத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப் படுகிறது.

சூரியன் வழிபட்டதலமாதலின், மாசிமாதம் 13,14,15ஆம் நாள்களில் மாலையில் 5.45 மணிமுதல் 6.10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.சப்த(ஏழு)ஸ்தானத் திருவிழாவில் (ஏழூர்திருவிழா) சுவாமி இங்கு வந்து இறங்கி, சற்று இளைப்பாறி செல்லும். சிலாத முனிவருக்கு, சாதாதாப முனிவர் தமையனாராதலின், இளைப்பாறிச் செல்லும்போது மூத்த மாமனார் என்ற வகையில் கட்டுச்சோறு கட்டித் தரும் ஐதீகமாக அன்று (தயிர்சாதம், புளியோதரை) – கட்டித்தந்து சுவாமியுடன் அனுப்புவது மரபாக இருந்துவருகின்றது.நவக்கிரக சந்நதியில் சூரியன் இரு மனைவியருடன் காட்சித் தருகிறார்.மூலவர் சுயம்புமூர்த்தி; பாணம் சற்று உயரமாக உள்ளது.பூ, ஜபமாலை ஏந்தி, இரு கைகளாலும் இறைவனை பிரார்த்திக்கும் அமைப்பில் உள்ள பிரம்மாவின் இவ்வுருவம் அழகுடையது.இந்த தலத்தில் பிரம்மனுக்கு தனிக் கோயில் உள்ளது. பிரம்மனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம்; பிரம்மன் சந்நதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாக சிறிய சிலா ரூபமாகவுள்ளது.

கல்வெட்டில், இப்பெருமான், ‘‘திருவீரட்டானத்து மகாதேவர்’’, ‘‘திருக்கண்டியூர் உடைய மகாதேவர்’’ எனக் குறிக்கப்படுகிறார்.திருவையாறு சப்தஸ் தானத்தில் இத்தலமும் ஒன்று.சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு சப்தஸ்தானத்துக்கும். அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். அங்கு பொம்மை பூப் போடும் நிகழ்ச்சி நடைபெறும். திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன்
தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு
பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லைகண் டீரண்ட
வானவரே…

சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆகிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் ஐந்து திருமுகங்களைப் பெற்றிருந்தான். எனவே, தானே படைப்புக்கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்கச் சிவபெருமான், பைரவர் உருவம்கொண்டு அவரைப் பிரம்மாவின் மேல் ஏவி, அவரது ஐந்தாவது தலையைக் கொய்துவருமாறு பணித்தார். பைரவரும் தமது இடக்கை நக நுனியால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்தார். அந்தத் தலை அப்படியே அவரது கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது.தோஷம் நீங்க வேண்டி பைரவர் இத்தலத்துக்கு வந்தபோது, பிரம்மனின் தலை, கையைவிட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மீண்டும் தமது படைப்புத் தொழிலைத் திரும்பப் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

மேற்கு நோக்கிய இக்கோயிலில் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என உள்ளது. இடதுபுறம் தண்டபாணி சந்நதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது.மூலவர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனியுடன் மேற்குப் பார்த்த நிலையில் எழுந்தருளியுள்ளார். மூலவர்பாணம் சற்று உயரமாகவுள்ளது. சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலகர்கள் இடத்தில் இருக்கிறார்.அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் அடுத்து இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். மகாலட்சுமி சந்நதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. விஷ்ணுதுர்க்கை சந்நதி உள்ளது. பைரவரும், ஒரே சந்நதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்களும் உள்ளனர். அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வர் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரம்மன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.

You may also like

Leave a Comment

one + 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi