*திருப்பாம்புரம்
ராகு, கேது இரண்டுக்கும் ஒரே தலம்
“பாம்பு என்றால் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் பாம்புக்குப் பயப்படத்தான் செய்கிறது. இந்தப் பாம்பை எட்டு வகையாக நம் புராணங்கள் பிரிக்கின்றன. அவை, கார்க்கோடன், அனந்தன், தட்சகன், சங்கபாலன், பதுமன், தட்சன், அருணன் மற்றும் ஆதிசேஷன் ஆகியவை. இவை யனைத்தும் ஒன்றாய்க்கூடி ஒரு தலத்தில் சிவபெருமானை வழிபாடு செய்த பெருமையுடையது திருப்பாம்புரம். இத்தலம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வூருக்குப் பக்கத்தில் செல்வத்தை அருளும் திருவீழிமிழலை என்ற தலமும் லலிதா சகஸ்ரநாமம் இயற்றப்பட்ட திருமீயச்சூரும் உள்ளன.
இந்தத் திருப்பாம்புரம் பல அற்புதங்கள் நிறைந்த ஒப்பற்ற ஒரு திருத்தலம். இங்குள்ள ஆலமரங்களின் விழுதுகள் நிலத்தில் படுவதில்லை. அகத்திப்பூ பூப்பதில்லை. பாம்பு முதலிய விஷப்பிராணிகள் யாரையும் தீண்டுவதில்லை. தீண்டினாலும் விஷம் ஏறுவதில்லை. அதற்குக் காரணமுண்டு. இத்தலத்தில் முன்பொரு காலத்தில் சித்தர்கள் ஆலம் விழுதை நாராகத் திரித்து அகத்திப்பூவை மாலையாக்கி இறைவனுக்கு அணிவித்து வழிபட்டனராம்.
அதனால் தாங்கள் செய்ததைப்போல் மனிதர்கள் யாரும் செய்யக்கூடாது என்பதனால் அகத்திப்பூ மொட்டாகத் தோன்றும். ஆனால் விரியாது. ஆலம் விழுது எவ்வளவு வளர்ந்தாலும் நிலத்தைத் தொடாது. எட்டுவகைப் பாம்புகளும் இறைவனை வழிபட்டதால் இங்கு யாரையும் பாம்பு தீண்டுவதில்லை. இத்தகைய இத்தலம் திருவண்ணாமலை திருத்தலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதாகும். அதற்குச் சான்று, இங்கு அண்ணாமலையார் எனும் லிங்கோத்பவர் சிலை இல்லை. இவ்வளவு தொன்மையான தலத்தின் கோயில் அமைப்பானது மாடக்கோயிலாக உள்ளது. ஒரு கோயிலின் மேல் அடுக்காக இன்னொரு கோயில் கட்டப்பட்டால் அதுதான் மாடக்கோயில். அவ்வகையில் இது மாடக்கோயில் வகையைச் சார்ந்தது.
மேலும், இத்தலம் ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு கிரகங்களுக்கும் பரிகாரத்தலமாக விளங்குகிறது. அதற்குக் காரணம், இங்கு ராகுவும் கேதுவும் ஒரே விக்ரகமாக இருந்து சிவபெருமானை வழிபாடு செய்கின்றனர். அதனால் இது ராகு – கேது பரிகாரத்தலமாக விளங்குகிறது.இத்தலம் ‘தென்காளஹஸ்தி’ என்று அழைக்கப்படுகிறது. ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம், 18 வருட ராகு திசை நடப்பு, 7 வருட கேது திசை நடப்பு, லக்னத்திற்கு இரண்டில் ராகுவோ, கேதுவோ இருத்தல், லக்னத்திற்கு எட்டில் கேதுவோ, ராகுவோ இருத்தல், ராகு – கேது புத்தி நடத்தல், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணத்தடை, கனவில் பாம்பு வருதல், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்தல், கடன்தொல்லை என இவை அனைத்திற்கும் இங்குப் பரிகார வழிபாடு செய்யப்படுகின்றன.
திருப்பாம்புரம் தலபுராணத்தைப் பொறுத்தவரை பல்வேறு வகையான கதைகள் விளங்கி வருகின்றன. 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவ்வாலயத் தலபுராணத்தில் உள் செய்திகளைத் தவிர பல்வேறு குறிப்புகளும் கதைகளும் உள்ளன. மேலும் கர்ண பரம்பரைக் கதைகள் செவிவழிச் செய்திகள் என இத்தலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தலபுராணங்கள் இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
பாம்புரத்தில் பூசை பண்ணி பதம் பெற்றோர் பன்னிருவர் எனத் தலபுராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேடன், பிரம்மன், பார்வதி, அகத்தியன், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், கணிதன் என்னும் வடநாட்டு மன்னன் மற்றும் கோச்செங்கட்சோழன் ஆகிய பன்னிருவர் இவ்விறைவனை வணங்கியதாகப் புராணம் கூறுகிறது.
ஆதிசேடன் பூசை வரலாறுவாயுபகவானுக்கும் ஆதிசேடனுக்கும் இடையில் தம்மில் யார் வலியவன் என்ற போட்டி ஏற்பட்டு வாயுபகவான் மலை களையெல்லாம் தம்வலிமையால் புரட்டி வீச முற்பட, ஆதிசேடன் மலைகளைப் பெயர்க்காவண்ணம் தனது வலிமையால் காத்து நிற்க பெரும்போர் மூண்டது. இருவரும் சமபலம் காட்டி நின்றதால் வெற்றியடைய முடியாத வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்திவிட உயிர்கள் அனைத்தும் சோர்ந்துவிட்டன. இந்திரன் உள்ளிட்ட தேவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆதிசேடன் போரில் இருந்து ஒதுங்கி நிற்க வாயுபகவான் வெற்றிக்களிப்புடன் மலைகளைப் புரட்டி வீசினான்.
அதனால் கோபமுற்ற ஈசன் வாயுபகவானையும், ஆதிசேடனையும் பேயுருவாகச் சபித்தார். இருவரும் தம் குற்றம் உணர்ந்து வணங்கித் தம்மைக் காத்தருள வேண்ட, வாயுபகவான் வைகை நதிக்கு வடக்கிலும் மதுரைக்குக் கிழக்கிலும் பூஜை செய்து விமோசனம் பெறலாம் எனவும், ஆதிசேடன் பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூசை செய்து விமோசனம் பெறலாம் என்றும் அருளியதன்பேரில் ஆதிசேடன் இங்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டு விமோசனம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது. இன்றும் அத்தீர்த்தம் இங்கு உள்ளது.
ஒருமுறை விநாயகர் இறைவனைத் தொழுதபோது சிவபெருமான் கழுத்தில் இருந்த பாம்பு, விநாயகர் தம்மையும் தொழுவதாக எண்ணிக் கர்வம் கொண்டது. அதனால் சினமுற்ற இறைவன் நாக இனம் முழுவதும் தம் சக்தியனைத்தும் இழக்கச் சாபமிட்டார். பின்னர் அஷ்ட மகா நாகங்களும் ராகுவும், கேதுவும் ஈசனைத் தொழுது தங்கள் பிழையைப் பொறுக்குமாறு வேண்ட, இவர்கள் அனைவரும் சிவராத்திரியில் தம்மைப் பூசித்து விமோசனம் பெற அருளினார். அவ்வாறே மகாசிவராத்திரி மூன்றாம் சாமத்தில் ராகுவும், கேதுவும் அஷ்டமகா நாகங்களும் இந்தத் திருப்பாம்புர நாதனை வணங்கிச் சாப விமோசனம் பெற்றனர்.
உலகைத் தாங்கும் ஆதிசேடன் அதன் சுமையால் உடல் நலிவுற்று வருந்தியபோது ஈசனின் ஆணைப்படி சிவராத்திரி இரவு முதல் காலம் குடந்தை நாகேஸ்வரரையும், இரண்டாம் காலம் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் வழிபட்டு மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாகவும் அதனால் இவ்வூரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும், யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராண வரலாறு கூறுகிறது. அதன்படி இங்கு யாரையும் பாம்பு தீண்டுவதில்லை.
பிரம்மா பூசை செய்த வரலாறுஉலகில் உள்ள எல்லோரைக் காட்டிலும் அழகான ஒரு பெண்ணைப் பிரம்மன் சிருஷ்டித்து அவளுக்குத் திலோத்தமை எனப் பெயரிட்டான். தம்மைப் படைத்ததால் பிரம்மனைத் தமது தந்தையாகக் கொண்டு திலோத்தமை வலம்வர அவள் அழகைக் காணவேண்டி திசைக்கொன்றாக நான்கு முகங்களைத் தனக்கு உண்டாக்கி அவர் அழகைப் பருக, அச்சமுற்ற திலோத்தமை வானத்திலோட மேலலேயும் ஒரு முக முண்டாக்கிக் கொண்டான் பிரம்மன். திலோத்தமை சிவனை வேண்ட, ஈசன் பிரம்மாவின் ஒரு தலையைக் கொய்ததுடன் படைப்புத் தொழிலையும் இழக்கச் சாபமிட்டார். முனிவர்கள் அறிவுரையின் பேரில் திருப்பாம்புரம் வந்த பிரம்மன் ஒரு தீர்த்தம் உண்டாக்கி ஓராண்டு காலம் தன் மனைவியுடன் இறைவனை வழிபடச் சாப விமோசனம் பெற்றான்.
இந்திரன் சாபம் நீக்கிய வரலாறு
அகலிகையைக் கள்ளத்தனமாகப் புணர்ந்ததால் கௌதம் முனிவரின் சாபத்துக்குள்ளான இந்திரன் உடலெங்கும் ஆயிரம் கண்ணுடையவராக ஆகி, ஒளி குன்றி வருந்தினான். தேவர்களின் ஆலோசனையின் பேரில் பாம்புரம் வந்த இந்திரன் 12 ஆண்டுகள் பூசை செய்ய மகா சிவராத்திரி முதல் சாமத்தில் இறைவன் காட்சியளித்து அவனுக்குச் சாப விமோசனம் அளித்தார்.
பார்வதி தேவி பூசை செய்தல்
கயிலாயத்தில் உமையும் சிவனும் இருந்தபோது அம்மை ஈசனின் கண்களைத் தம் கையால் மூட, உலகமே இருண்டு அனைவரின் தொழிலும் நின்றுபோனது. அதனால் சினமுற்ற ஈசன் தம்மைவிட்டு நீங்குமாறு அன்னைக்குச் சாபமிட்டார். தாம் செய்தது தவறு என்றும் உமையவள் தொழுது நிற்க, பாம்புரம் சென்று தம்மை 12 ஆண்டுகள் பூசித்தால் சாபம் நீங்கும் என அருளினார். அவ்வாறே உமையவளும் 12 ஆண்டுகள் பூசை செய்து மகா சிவராத்திரி இரவு நான்காம் சாமத்தில் சாப விமோசனம் பெற்றாள்.
அகத்தியர் பூசை செய்தல்
கயிலையில் கூடிய தேவரும் முனிவரும் பேசும்போது வடமொழிக்கு நிகரான மொழி இவ்வுலகத்தில் இல்லை எனக்கூற, அகத்திய முனிவர் அதனை மறுத்து வடமொழிக்கு ஈடான ஒரேமொழி தமிழ் என வாதிட, அரியும் அரனும் அதை ஏற்று மனத்தில் அங்கீகரித்தனர். ஆனால், தேவர்களும் முனிவர்களும் ஒன்றுபட்டு கூறிய கருத்துக்கு மாறுபட்டுப் பேசியதால் அகத்தியரைத் தேவர்கள் ஊமையாகச் சபித்தனர். அகத்தியர் ஈசனை வணங்கித் தமது சாபத்தை நீக்க வேண்டினார். திருவீழிமிழலை அருகிலுள்ள திருப்பாம்புரம் தலத்தில் தம்மை ஓராண்டு பூசித்தலால் பாவம் தொலையும், சாபம் நீங்கும் என அருள அவ்வாறே அவர் பூசை செய்தார். மகா சிவராத்திரி முதல் சாமத்தில் இறைவன் தோன்றி அவரைப் பேசும்படிச் செய்து பொதிகை மலைசென்று தமிழ் வளர்க்க அருளினார்.
அக்னி பூசை செய்தல்
தட்சன் வேள்வியின்போது ஈசனுக்கு அவிர்பாகம் தராமல் பிற தேவர்களுக்கு அவிர்பாகம் தந்ததால் சினமுற்ற இறைவன் வீரபத்தர் உருவில் அக்னியின் கையைத் துண்டித்துக் காலால் உதைக்க, அக்னி கீழே விழுந்தான். தம் தவறை உணர்ந்த அக்னி ஈசனைத் தொழுது தம்மைப் பொறுத்தருள வேண்ட, ஈசனும் தம்மைப் பாம்புரத்தில் தொழுது நலம்பெறக் கூறினார். அவ்வாறே மூன்றாண்டுகள் இங்கு தங்கி அக்னி வழிபட்டு மகாசிவராத்திரியின் இரண்டாம் சாமத்தில் சாப விமோசனம் பெற்றான்.
தட்சன் பூசை செய்தல்
இருபத்தேழு நட்சத்திரங்கள் பெற்றெடுத்த தட்சன் அவர்களைச் சந்திரனுக்குத் தானமாக அளித்தார். பின்னர் பெற்ற உமையவளை ஈசனுக்கு மணமுடித்தான். இதன் பின்னர் பெரும் யாகம் ஒன்றைச் செய்த தட்சன், தன் மருமகனான ஈசனை யாகத்துக்கு அழைக்காமலும் அவிர்பாகம் தராமலும் அவமானப்படுத்தியதால் ஈசன் சினந்து, வீரபத்திரனை பிரம்மா, இந்திரன் உள்ளிட்ட தேவர்களும் ஈசனை சாந்தப்படுத்த தட்சன் உடலில் ஆட்டுத் தலையை ஒட்டி உயிர்ப்பித்தார். கர்வம் அழிந்த தட்சன் ஈசனை வணங்கித் தமது பாவங்களை நீக்குமாறு வேண்ட, ஆதிசேடன் பூசித்த பாம்புரம் சென்று 12 ஆண்டுகள் பூசை செய்யின் பாவம் நீங்கும் என்று அருளினார்.அவ்வாறே பூசை செய்து மகாசிவராத்திரி நான்காம் சாமத்தில் தட்சன் பாவம் நீங்கப்பெற்றான்.
கங்காதேவி பாவம் தீர்த்த வரலாறு
எல்லோருடைய பாவங்களையும் ஏற்றுக் கொண்டதால் பாவச்சுமையைத் தாங்கமுடியாத கங்காதேவி கயிலாயம் சென்று தனது பாவ மூட்டைகளை அழிக்க வழிகேட்டு இறைவனை வேண்டினாள். திருவீழிமிழலைக்கு வடக்கில் உள்ள பாம்புரத்தில் போய் பூசை செய்தால் உன்னிடமுள்ள பாவம் தீரும் என ஈசன் உரைக்க கங்காதேவி மயிலாடுதுறையின் காவிரி நதியில் உறைந்து ஐப்பசி முப்பது நாளும் இருந்து கார்த்திகை மாதம் திருப்பாம்புரம் வந்து சேர்ந்தாள். 16 ஆண்டுகள் கங்கை இத்தலத்தில் தங்கி பூசை செய்து மாசி மாதம் சிவராத்திரியின் இரண்டாம் சாமத்தில் ஈசன் அருள்பெற்றுப் பாவங்களைத் தொலைத்தாள்.
சூரியன் பூசை செய்து பழி நீங்கிய வரலாறு
உலகமெல்லாம் ஒளி உண்டாக்க நமக்கு ஒளி அளிப்பவர் யார்? என நைமிசாரண்யத்தில் உறையும் முனிவர்களை சூரியன் கேட்க வியாசரே உமக்குப் பதிலுரைக்க வல்லவர் என அவர்கள் உரைத்தனர். வியாசரை வணங்கி சூரியன் நமக்கு ஒளி உண்டாகும் உபாயம் பற்றிக் கேட்க வியாசர் பாம்புரம் சென்று ஈசனை வழிபட்டால் ஒளி பெறுவாய் என உரைத்தார். சூரியனும் காசி சென்று கங்கையில் நீராடி மாயூரநாதரை வணங்கிப் பின் திருப்பாம்புரம் வந்தான்.ஆதிசேடன் பூசித்த லிங்கத்தைத் தினம் ஆயிரம் பூக்களால் அர்ச்சித்து 12 ஆண்டுகள் பூசை செய்தான். சித்திரை மாதம் உச்சிகால வேளையில் ஈசன் தோன்றி அவனுக்கு வரமளித்து ஒளியுடன் உலா வரச்செய்தார்.
சந்திரன் பழி நீங்கிய வரலாறு
வியாழன் (குரு) இல்லாத நேரத்தில் அவர் மனைவி வானதாரை, சந்திரனை மோகித்துப் புதனைப் பெற்றெடுத்தாள். சினமுற்ற சந்திரனைக் கூடியரோகம் பீடிக்கச் சாபமிட்டார். தேவர்களும் இந்திரனும் சந்திரனும் முனிவர்களை வணங்கி நோய் தீர வழி கேட்டனர். சிவனை வழிபட்டால் இப்பாவம் தொலைந்து கூடியரோகம் (காசநோய்) நீங்கும் எனக்கூறி பாம்புரத்தில் ஈசனை வழிபட்டு ரோகம் நீங்கலாம் என உரைத்தனர். தினமும் ஆயிரம் மலர் களைக்கொண்டு 12 ஆண்டுகள் பூசித்து தை மாதம், தனூர் பூரணையில் உச்சிக்காலத்தில் ஈசன் அருள்பெற்ற சந்திரன் கூடியரோகம் நீங்கப்பெற்றான்.
சுனிதன் பூசை செய்த வரலாறு
மன்னன் சுநீதன் என்பவனை முயலகன் என்ற நோய் பீடித்து வலிப்பு வந்து வாடினான். பின்னர் வசிட்ட முனிவனைச் சந்தித்து தம் நோய் தீர வழி வேண்டினான். அவர் கூற்றுப்படி மயிலாடுதுறை வந்து காவிரியில் நீராடி பின்னர் பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கிக் கரையேற அவன் நோய் நீங்கியது. பின்னர் அம்மன்னன் இத்தலத்தில் ஓராண்டு தங்கியிருந்து நிருத்த மண்டபம், அம்மன் கோயில் திருப்பணி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கட்டினான்.நான்கு கோபுரங்கள், திருமதில், மூன்று பிரகாரம் பிரம்ம தீர்த்தத்துக்குப் படித்துறைகள் ஆகியனவும் இம்மன்னன் வழங்கியதாகத் தலபுராணம் குறிப்பிடுகிறது.
கோச்செங்கணான் பூசை செய்த வரலாறு
சோழ மன்னனான கோச்செங்கட்சோழன் முற்பிறவியில் செய்த வினையால் வெண்குட்டம் எனும் நோய் பீடித்து உடலெங்கும் வெண்ணிறமாகி உடல் தளர்ந்தான். வசிட்டரைப் பூசித்து தமது நோய் தீரும் வழி சொல்ல வேண்டினான். சோழன் வசிட்டரின் கூற்றுப்படி பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கி ஆலயத்தில் ஈசனை வணங்கிப் பூசை செய்ய அவன் குட்டம் நீங்கியதாகத் தலபுராணம் கூறுகிறது.
இதனால் மகிழ்வுற்ற கோச்செங்கட் சோழன் மூன்று ஆண்டுகள் இங்கு தங்கி கோயில் திருப்பணிகள், உயர்ந்த கோபுரங்கள், மண்டபங்கள், படித்துறைகள், நந்த வனம், தோட்டம், சோலைகள், கோயில் வீதி எனப் பற்பல நற்பணிகள் செய்தான்.ஆலயத்தில் சதாசிவனைப் பிரதிஷ்டை செய்த சிறப்பான சிவகங்கை தீர்த்தம் உண்டாக்கி சிலந்தி சோழபுரம் என ஊருக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். இத்தகு தலத்தில் இன்னும் இப்போதும் பலர் வழிபட்டுப் பலப்பல பலன் பெறுகின்றனர்.
சிவ.சதீஸ்குமார்
* அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சுரைக்காயூர் அஞ்சல், திருப்பாம்புரம். கும்பகோணத்தில் இருந்து 28 கி.மீட்டரும், மயிலாடுதுறையில் இருந்து 22 கி.மீ., தூரத்திலும் இக்கோயிலை அடைந்துவிடலாம்.