இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ், குக்கி, நாகா இனத்தவரிடையே ஏற்பட்ட மோதலில் 260 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வௌியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு இப்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது.
மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபால், காக்சிங், பிஷ்னுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் 5 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.