சென்னை: கடலூர் துறைமுகத்தை இயக்குவதற்காக தனியார் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கடலூர் துறைமுகத்தை தனியார் பங்களிப்புடன், துறைமுக இயக்கு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால், இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் தகுதிபடைத்த துறைமுக இயக்கு நிறுவனமாக மஹதி இன்ப்ரா சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு கடல்சார் வாரியம் மற்றும் மஹதி கடலூர் போர்ட் அண்ட் மேரிடைம் பிரைவேட் லிட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச்செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச்செயல் அலுவலர் வெங்கடேஷ், மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், மஹதி கடலூர் போர்ட் அண்ட் மேரிடைம் பிரைவேட் லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி சங்கர், இயக்குநர் கல்யாண் சொரூப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.