கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மனைவி, குழந்தை மற்றும் மாமியார் உடன் இன்று காலை சென்னையில் இருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே கார் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த அஜித், அவரது மனைவி மதுமிதா, குழந்தை ஜெனிலியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாமியார் தமிழ்ச்செல்விக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த வேப்பூர் போலீசார், தீயணைப்புத் துறையினர் தமிழ்ச்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் துர்த்தஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி தமிழ்செல்வியும் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கார் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.