கடலூர்: கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணை ஆற்றில் நேற்று சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கையில் சில துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்துள்ளது. அதை கலெக்டர் அலுவலக பாதுகாப்பு போலீசாரிடம் கொடுத்தனர். போலீசார் அந்த இடத்தில் சோதனை செய்தபோது 6 மாடல்களில் 169 தோட்டாக்கள் கிடைத்துள்ளது. அவற்றை போலீசார் எஸ்பி அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர். இது குறித்து எஸ்.பி ராஜாராம் கூறுகையில், தோட்டாக்களில் மண் படிந்திருப்பதால் பரிசோதனைக்கு பிறகே அஎந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவரும். இவை ஏர் பிஸ்டல், ரிவால்வர்களில் பயன்படுத்தக்கூடிய வகையைச் சேர்ந்தது. அனைத்தும் பயன்படுத்தாத தோட்டாக்கள். அந்த இடத்தில் மீண்டும் சோதனை செய்யப்படும் என்றார். கடந்த மாதம் மீனவர் வீசிய வலையில் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சிக்கியது குறிப்பிடத்தக்கது.