கடலூர்: கடலூரில் சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை கைது செய்தது போலீஸ். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் முன் விரோதம் காரணமாக திமுக நிர்வாகி மீது 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ தியாகராஜன் என்பவரின் மகன் இளையராஜா. இவர் சமூக ஆர்வலராகவும் திமுக நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார் .
வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லமும் நடத்தி வந்துள்ளார். இந்த சூழலில் விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே உள்ள தனது விவசாய நிலத்திற்கு இளையராஜா நேற்று சென்றுள்ளார் அதன் பிறகு மாலை 5 மணி அளவில் அவர் காரில் வீட்டுக்கு புறப்பட்டபோது ஆறு பேர் கொண்ட கும்பல் இளையராஜாவை சுட்டு விட்டு தப்பி சென்றனர். காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
முன் விரோதம் காரணமாக மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரனின் மகனான ஆடலரசு, புகழேந்தி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் தன்னை சுட்டதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் கடலூரில் சமூக ஆர்வலர் இளையராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். கடலூர் தனியார் மருத்துவமனையில் வைத்து ஆடலரசு, புகழேந்தி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளையராஜா, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.