கடலூர்: கடலூரில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூமில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடலுார் மாவட்டம் செல்லங்குப்பம் இம்பீரியல் ரோட்டில் அமைச்சர் பொன்முடி மனைவி விசாலாட்சிக்கு சொந்தமான பைக் விற்பனை மையம் உள்ளது. அங்கு கடந்த மாதம் 12ம் தேதி நள்ளிரவில் பின்பக்க ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து அதில் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம், 6 கிராம் தங்க நாணயங்களை கொள்ளையடித்து சென்றனர். கடலூரில் 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள பிரதான சாலையில் நடந்த கொள்ளை பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொள்ளை சம்பவம் தொடர்பாக வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், ஜார்க்கண்ட் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 3 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த அப்துல் ஷேக் (50), மேற்குவங்கத்தைச் சேர்ந்த சாதிக் கூல் (26), தாரிக் ஆசிஸ் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் கைது செய்யும்போது தப்பியோட முயன்ற அப்துல் ஷேக் என்பவர் கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.