கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து கை விலங்குடன் கைதி தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறை சாலை உள்ளது. இங்கு ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் உடையார்பேட்டை பகுதியை சேர்ந்த சீனி முகமது மகன் அமீர் அப்துல் காதர் என்பவர் திண்டிவனத்தில் நடந்த ஒரு இருசக்கர வாகன கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் கடந்த மாதம் முதல் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார்.
அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், காவல் நீட்டிப்புக்காக போலீசார் அவரை கடலூர் மத்திய சிறையில் இருந்து நேற்று திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அங்கு அவருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டதை அடுத்து, மீண்டும் கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக திண்டிவனத்தில் இருந்து நேற்று மாலை கடலூர் பேருந்து நிலையத்திற்கு இரண்டு போலீசார் அவரை கைவிலங்குடன் அழைத்து வந்திருந்தனர். அப்போது போலீசாரை ஏமாற்றிவிட்டு அமீர் அப்துல் காதர் திடீரென தப்பி ஓடிவிட்டார்.
இது தெரியாத போலீசார் அவரை பேருந்து நிலையம் முழுதும் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் அவர் அங்கு கிடைக்கவில்லை. பின்னர் போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு சென்று பார்த்துள்ளனர் அங்கும் அவர் இல்லை. பின்னர் இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து நிலையத்திலிருந்து தப்பி சென்ற அமீர் அப்துல் காதரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதி அமீர் அப்துல் காதர் நேற்று மாலை கடலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த உடனே தப்பி சென்றுள்ளார். அவரை அழைத்து வந்த இரண்டு போலீசார் உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், பேருந்து நிலையம் முழுதும் தேடி உள்ளனர். பின்னர் கடலூர் மத்திய சிறைக்கு சென்று இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே அங்கிருந்து நள்ளிரவில் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதி தப்பிய உடனேயே திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருந்தால் அவரை உடனடியாக கைது செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.