புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரியில் போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் பலகோடி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் பெண் ஒருவரை கைது செய்து, அவரிடம் இருந்த நகை மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் ஏப்ரல் மாதம் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், பான் கார்டு மற்றும் ரூ.2.45 கோடி பணம் இருந்தது. தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமது உள்ளிட்டோர் மீது இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால், பல கோடி மோசடி என்பதால் அமலாக்கத்துறை தாமாக முன்வந்து இவ்வழக்கில் விசாரணை நடத்தியதோடு போலி சைக்கிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி நிஷாத் அகமதுவை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவ்வழக்கு புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்திலிருந்து, புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பின்னர், கைது செய்யப்பட்ட நிஷாத் அகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நிஷாத் அகமது தன்னை காப்பற்றிக்கொள்ள ரூ.80 லட்சம் வழக்கறிஞரிடம் கொடுத்து, சைபர் கிரைம் போலீசார் உள்ளிட்ட சிலருக்கு கொடுத்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தியை புதுச்சேரி காவல்துறை தலைமையகம் கடந்த மாதம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது. இதனிடையே, சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் அம்பிகா என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் அம்பிகாவை நீதிமன்ற உத்தரவின்படி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அம்பிகா தெரிவித்து இருப்பதாகவும், அதன்படி போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். மேலும், சிபிசிஐடி போலீசார் அம்பிகாவிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர்.


