நெல்லிக்குப்பம்: கடலூர் மாவட்டத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க கடந்த 21ம் தேதி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கடலூர் மஞ்சை நகர் பகுதியில் ரோட் ஷோவில் நடந்து சென்று பொதுமக்களை நேரில் சந்தித்தும், கை கொடுத்தும், மனுக்களை பெற்றும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும், ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள மாணவன் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சசிகுமார் மகன் கோகுல்நாத், தான் வரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை ரோட் ஷோ சென்ற முதல்வரிடம் காண்பித்தார்.
அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த முதல்வர் ஸ்டாலின், அவனிடம் தன்னை அழகாக வரைந்துள்ளாய் என பாராட்டி அந்த ஓவியத்தில் மாணவனை கைப்பேசி எண்ணுடன் கையெழுத்து போட சொல்லி பெற்றுக்கொண்டார். பின்னர் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசுகிறேன் என மாணவனிடம் கூறி சென்றார். இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில் மாணவன் கோபிநாத்தை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதல்வரின் நேர்முக உதவியாளர், உன்னிடம் முதல்வர் பேசுகிறார் என கூறினார். பின்னர் மாணவனிடம் முதல்வர் ஸ்டாலின், ‘படம் வரைந்து கொடுத்த மாணவன் நீதானே, அந்த ஓவியத்தை வரைந்தது நீதானா, படம் வரைய முதலிலேயே கற்றுக் கொண்டாயா, ஓவியம் வரைய ஓவிய பள்ளிக்கு செல்கிறாயா’ எனக் கேட்டார்.
அதற்கு மாணவன், ‘நான் சிறு வயதிலேயே நன்றாக படம் வரைவேன் சார்’ என கூறினார். ‘எதற்காக எனது படத்தை திடீரென வரைந்தாய்’ என முதல்வர் கேட்டபோது, ‘உங்களிடம் கொடுக்க எனது அப்பா வரைய சொன்னதால் உங்களை வரைந்துள்ளேன் சார்’ என கூறினார். தொடர்ந்து முதல்வர், படம் அழகாக வரைந்துள்ளாய், மிக்க மகிழ்ச்சி, நன்றாக படிக்க வேண்டுமென மாணவனை பாராட்டி வாழ்த்தினார். தமிழக முதல்வர் மாணவனை அலைபேசியில் அழைத்து பேசியது நெல்லிக்குப்பம் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் கோகுல்நாத் பள்ளியில் நடக்கும் பல்வேறு ஓவியப் போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.