*அரசு மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.தமிழகத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கடலூரில் 15 ஆண்களும், இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 13 பெண்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தற்போது நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மீதமுள்ள 7 பேர் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 83 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 83 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடலூர் மாநகராட்சி முழுவதும் உள்ள வீடுகளில் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொசு ஒழிப்பு குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.