கூடலூர்: கூடலூர் அருகே விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள் பாக்கு, தென்னை மரங்களை சாய்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட தேன் வயல் பகுதியில் தொடர்ந்து இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் இங்கு வசிக்கும் விவசாயிகளின் தென்னை, பாக்கு மரங்களை உடைத்து சேதப்படுத்தி வருகிறது. முதுமலை வனப்பகுதியில் இருந்து இரவில் வரும் 2 யானைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக தேன்வயல், குனில்வயல், புத்தூர்வயல், வடவயல் உள்ளிட்ட வன எல்லையை ஒட்டியுள்ள அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கடந்த 3 நாட்களாக தேன் வயல் பகுதியில் வசிக்கும் விவசாயி செரியன் என்பவரது தோட்டத்திற்குள் இரவு நேரத்தில் வரும் 2 இரண்டு யானைகள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கு மற்றும் தென்னை மரங்களை அடியோடு சாய்த்து சேதப்படுத்தி உள்ளது. வன எல்லையில் உள்ள அகழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நிரந்தரமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.