சென்னை: சென்னை தரமணியில் இயங்கி வரும் சிஎஸ்ஐஆர் கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் எஸ்இஆர்சி இன்று வைரவிழாவை கொண்டாடுகிறது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்தவல்லி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த 1965ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி தொடங்கப்பட்ட சிஎஸ்ஐஆர் எஸ்இஆர்சி நிறுவனம் 60வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. கட்டமைப்பு பொறியியல் துறையில் இங்கு ஆராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுமான துறையில் முக்கிய பங்கு வகிக்கும் முறுக்கு கம்பி நாங்கள் உருவாக்கியதுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
கட்டமைப்பு துறையில் புதுமைகளை கண்டறிவதுடன் பாரம்பரிய கட்டிடங்களை பராமரிப்புக்கான புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகிறோம். பாதுகாப்புத்துறை, அணுசக்தித்துறை, ரயில்வே, காற்றாலை, சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித்துறை என பல்வேறு துறைகளில் எங்கள் நிறுவனத்தின் பெரும் பங்களிப்பு உள்ளது. முப்பரிமாண அச்சு (2டி பிரிண்டிங்) பயோ-இன்ஜினியரிங், பழைய கட்டிடங்களை மறுசுழற்ச்சி மூலம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள் பாம்பன் செங்குத்து தூக்கு ரயில் மேம்பால கட்டுமான பணியில் எங்கள் விஞ்ஞானிகளும் பங்காற்றியுள்ளனர். தண்டவாளத்தை சென்சார் முறையில் கண்காணிக்க ஆலோசனை வழங்கி உள்ளனர். அண்மையில் காஷ்மீரில் பிரதமர் திறந்துவைத்த உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் உறுதித்தன்மையை கண்காணிக்கும் பணியை எங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. எங்கள் நிறுவனத்தின் வைரவிழா செவ்வாய்க்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. சாதனைகளை எடுத்துரைக்கும் வண்ணம் சிறப்பு அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இவ்விழாவில், மும்பை ஹோமி பாபா தேசிய நிறுவனத்தின் துணைவேந்தர் யு. காமாட்சி முதலி, குஜராத் மாநில அரசின் அணை பாதுகாப்பு மறுஆய்வு குழு உறுப்பினர் ராம்ஜி சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். வைரவிழாவின் முக்கிய அம்சமாக முன்னாள் இயக்குநர்கள் நினைவாக இரண்டு இண்டர்ன்ஷிப் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. மேலும் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் நாங்கள் கட்டியுள்ள மாதிரி கட்டிடமும் திறந்துவைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தலைமை விஞ்ஞானிகள் பாரி வள்ளல், சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.