‘‘கிரிப்டோ கரன்சி விவகாரம் பூதாகரமாகி வருது போலிருக்கே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..ஆன்மீக பூமியான புதுச்சேரி யூனியனில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறதாம். அதிலும் ரூ.200 கோடி வரையிலான கிரிப்டோ கரன்சி விவகாரம் பூதாகரமானதாம். பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்த பலே மோசடியில் ஏற்கனவே 4 பேர் சிக்கியிருந்த நிலையில் சமீபத்தில் பெங்களூரில் பதுங்கியிருந்த அந்நிறுவன இயக்குனர் பாஷா சிக்கினாராம்.
இதில் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானபோதிலும், உரிய ஆதாரம் இல்லாததால் காக்கிகளுக்கு விசாரணையை தொடர்வதில் சிக்கல்கள் எழுந்தது. சமீபத்தில் பாஷாவை காவலில் எடுத்து தடாலடியாக விசாரிக்கவே நடிகைகள் மற்றும் போலி பங்குசந்தை மோசடி கும்பல் தலைவனுடனான தொடர்புகள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாம் இதன் காரணமாக கிரிப்டோ கரன்சி நிறுவன துவக்க விழாவில் லட்சக்கணக்கில் ப-விட்டமின் பெற்று பங்கேற்ற இரண்டு பிரபல நடிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாம் சைபர் க்ரைம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குக்கர் கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சியில் இணையும் முடிவில் இருக்கிறார்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘உண்மை தான்.. மன்னர் மாவட்டத்தில் உள்ள அமமுக நிர்வாகிகள் டிடிவியிடம் முறையிட்டு பின்னர் மாற்று கட்சியில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிடிவி நமக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை இல்லை. பல முறை மாவட்ட அரசியல் தகவல்களை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இறுதியாக சமீபத்தில் மன்னர் மாவட்டத்திற்கு வந்த டிடிவியிடம் முறையிட்டும் பயனில்லை. இப்பவும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மன்னர் மாவட்டத்தை சேர்த்த நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த செயலை கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தலைமைக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. எங்களை மாற்றினால் என்ன மாற்றாவிட்டால் என்ன. இங்கு இருக்கிறதும் ஒன்னும் தான். இல்லாததும் ஒன்னும் தான் என தலைமைக்கு கடிதம் போனது குறித்து தெரிந்த அமமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேரூராட்சி பெண் பணியாளர்களுக்கு என்ன பிரச்னையாம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்துல உள்ள பேரூராட்சிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பரப்புரையாளர்களாக 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்காங்களாம். இவர்கள் அனைவரும் பெண் பணியாளர்கள் தானாம். இவங்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கவில்லையாம். ஏற்கனவே சொற்ப சம்பளத்தில், தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில தான் நியமிக்கப்பட்டு இருக்காங்களாம். தெருவில் தூய்மை பணியாளர்கள் சரியாக குப்பைகளை அள்ளுகிறார்களா, பொதுமக்கள் தரம் பிரி்த்து குப்பைகளை கொட்டுகிறார்களா என்பதை கண்காணிக்கிறது தான் இவர்கள் வேலையே. காலையில இருந்தே வேலை ஆரம்பிச்சு விடுமாம். கஷ்டப்பட்டு வேலை பார்த்தும் சம்பளம் பட்டுவாடா இல்லாததால நொந்து போய் இருக்கிறார்களாம். மனுநீதி நாள் முகாமில, மாவட்ட உயர் அதிகாரியை பார்த்து மனு கொடுக்க முடிவு பண்ணி இருக்காங்களாம். உயர் அதிகாரியும் பெண் என்பதால், பெண்கள் படும் கஷ்டம் அவங்களுக்கு தெரியும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்டப்பஞ்சாயத்தில் புகார் வாபசானதாமே..’’ என ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மெடல் மாவட்டத்தின் பட்டாசு நகர் பதிவு அலுவலகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பு நிலத்தை பதிவு செய்ய 5 பேர் வந்தனர். இவர்களின் ஆவணங்களைக் கண்டு சந்தேகித்த பதிவு அதிகாரி, ஆய்வு செய்ததில் அத்தனையும் போலி எனத் தெரிந்து அதிர்ந்து போனார். காக்கிச்சட்டைக்காரர்களுக்கு தகவல் போனது. அவர்களும் விரைந்து வந்து 5 பேரையும் பிடித்து ஸ்டேஷன் கொண்டு போய், க்ரைம் பிரிவில் இருந்த அதிகாரி விசாரித்ததில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர்கள் ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்களில் மோசடியாக பத்திரப்பதிவு செய்ததும் தெரிந்தது. அப்போது சிலருக்கு பணம் தந்ததாகவும், கைது நடவடிக்கை எடுத்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டுமென இவர்கள் அடம் பிடித்துள்ளனர். ஆதாரங்களையும் போலீசிடம் கொடுத்தனர். இதில் அதிர்ச்சிக்கு ஆளான போலீஸ், பதிவு ஊழியர்கள் சிலருடன், இந்த போலி நபர்களிடமும் கட்டப்பஞ்சாயத்து பேசி கடைசியில் புகார்கள் வாபஸ் ஆகி, ஏதோ ஒரு வகை ‘டீலிங்’கில் இருதரப்பின் மீதும் நடவடிக்கை இன்றி அனுப்பி வைத்திருக்கின்றனர். பட்டாசு நகரில் இந்த சேதிதான் இப்போதைக்கு வெடித்துச் சிதறி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்த தகவல் உளவுப்பிரிவால் மேலிடத்திற்கு போக, தவறு செய்த அத்தனை பேர் வயிற்றுக்குள்ளும் புளி கரைக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உயர் அதிகாரிகளின் ஆதரவோடு கலர் டிரெஸ்சில் கெத்தாக வலம் வருகிறாராமே பெண் போலீஸ்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகர ஆயுதப்படை போலீசில் பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் சீனியர், ஜூனியர் என யார் பேச்சையும் கேட்பதில்லையாம். அதிகாரிகளுக்கே இவரை பார்த்தால் கொஞ்சம் பயம்னு பேசிக்கிறாங்க. இந்த பெண் போலீஸ் பணியில் சேர்ந்ததில் இருந்து போலீஸ் யூனிபார்ம் அணிந்ததே இல்லையாம். எப்போதும் கலர் டிரெஸ்தான் போடுவாராம். யார் சொன்னாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறாராம். உயர் அதிகாரிகளோட ஆதரவு இருப்பதால் பெண் போலீஸ் கெத்தாக வலம் வருகிறாராம். யூனிபார்ம் போடாமல் ஜாலியாக வலம் வரும் இவரை பார்க்கும் மற்ற பெண் போலீசாரும் இவரை போலவே மாற வேண்டும் என்ற எண்ணம் வருதாம். இதே மாதிரி போனா இன்னும் ெகாஞ்சம் நாளில் ஆயுதப்படை பெண் போலீஸ் எல்லாம் கலர் டிரெஸ் மட்டும் போடும் காலம் வந்துவிடும்னு போலீஸ்காரங்க பேசிக்கராங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மணி வரதால பணி இடமாற்றம் உத்தரவு வந்தும் போகாமல் இருக்கிறாராமே அதிகாரி..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி ஒன்றியத்துல 15 வருஷத்துக்கும் மேலாக கணக்கு அதிகாரி ஒருத்தரு, ஆறு அணி, வெஸ்ட் ஆறு அணி என்று 2 இடங்கள்ல மட்டும் மாறி, மாறி பணிபுரிஞ்சு வர்றாராம். இந்நிலையில கடந்த 11 மாதங்களுக்கு முன்னாடி இந்த கணக்கு ஆபீசரை போளூருக்கு பணியிடமாற்றம் செஞ்சி கலெக்டர் உத்தரவிட்டிருந்தாங்க. கலெக்டர் உத்தரவு போட்டிருந்தாலும், பணியிட மாற்றமாகி செல்லவில்லையாம். அங்கேயே தொடர்ந்து பணிபுரிஞ்சு வர்றாங்க. காரணம் ஆறு அணியில, மணி அதிகமாக கிடைக்குதாம். இதனால ஆறு அணியில இருந்து வேறு பணியிடத்துக்கு மாறிபோக மனசு வரவில்லையாம். சம்திங் வர்றதுல ஒன்றிய ஆபீசருக்கும் கொடுக்குறதால அவங்களும் இந்த பணிமாற்றத்தை கண்டுகொள்ளவில்லையாம். ஆபீசருக்கும் கொடுக்குறதால, இவங்க தன்னை ஒன்றிய ஆபீசர் போலவே நினைச்சுகிட்டு ஊழியர்களை வாட்டி வதைக்குறாங்களாம். இந்த சங்கதிகள் எல்லாம் இப்பத்தான் ஒவ்வொன்னாக அந்த ஒன்றியத்துல இருந்து புகார் குரல்களாக ஒலிக்கத்தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.