கிரையோஜெனிக் எஞ்ஜின் என்பது செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும். அதிக எடையுடைய செயற்கைக்கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்ஜினில் ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன. சோதனைக்குப்பின் தான் இந்த இரு வாயுக்கள் சிறந்தவை என முடிவெடுக்கப்பட்டது. சாடர்ன் V செலுத்து வாகனம் சந்திரனை அடைந்ததற்கு இந்த இயந்திரமே முக்கியக் காரணமாகும். சாடர்ன் V (Saturn V) என்பது அமெரிக்காவின் மனிதர் செல்லத்தக்க, மீண்டும் பயன்படுத்த வியலாதஏவூர்தியாகும்; இது நாசாவினால் 1967 முதல் 1973 வரை பயன்படுத்தப்பட்டது.மூன்று நிலைகளைக் கொண்ட இவ்வகை ஏவூர்திகள் அனைத்து நிலைகளிலும் திரவ எரிபொருட்களைப் பயன்படுத்து பவையாக வடிவமைக்கப்பட்டன. இவை, நிலவினை ஆராய்வதற்கென பிரத்யேகமாகச் செயல்படுத்தப்பட்ட அப்பல்லோ திட்டத்திற்கென வடிவமைக்கப்பட்டன. பின்னர் அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமான ஸ்கைலேப்-பினை விண்ணில் செலுத்தவும் பயன்படுத்தப்பட்டன.
புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 13 முறை சாடர்ன் V ஏவூர்திகள் விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன; அவற்றுள் எந்த ஏவுதலிலும் மனிதப் பயணிகளுக்கோ அல்லது சுமைகளுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிரையோஜனிக் இயந்திரத்தை வடிவமைப்பது மிகவும் சிக்கலான ஒன்றாகும். ஆக்சிஜன் வாயுவை (LOX) மைனஸ் 183 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் மற்றும் ஹைட்ரஜன் வாயுவை (LH2) மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தாலும் அவை திரவமாகிவிடும். அதன்பின் இவை எரிபொருளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்விரு எரிபொருட்களும் எரியக்கூடிய இயந்திரத்தின் உட்புறச் சுவரை வடிவமைப்பது மிகவும் சிக்கலானதாகும். இந்த திரவங்கள் ராக்கெட்டின் முன்புறத்தில் தனித்தனி இடங்களில் சேமித்து வைக்கப்படும். ராக்கெட் உயரே செல்லும்போது இந்த இரண்டும் ராக்கெட்டின் கீழ்ப்புறமுள்ள பகுதியில் வாயுவாக மாறி ஒன்றுசேர்ந்து எரிந்து சிறப்பான உந்து சக்தியை வெளிப்படுத்தும். விண்வெளியில் மேலே செல்லச் செல்ல எரிபொருளுக்கு உதவும் ஆக்சிஜன் கிடைக்காது என்பதால் அது ராக்கெட்டிலேயே வைத்து அனுப்பப்படுகிறது. விண்வெளி திட்டத்தின் முன்னேற்றத்திற்கு முக்கியமான கிரையோஜெனிக் எஞ்ஜினை இஸ்ரோ தனது ஜிஎஸ்எல்வி திட்டத்திற்குப் பயன்படுத்துகிறது.