புதுடெல்லி: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சட்டவிரோதமாக குடியேறியவர்களையும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்களையும் நாடு கடத்தி வருகிறார். கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 1000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு அழைத்து வரப்படுவதாக ஏற்கனவே சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி அழுத்தப்பட்டு அவரது கையில் அதிகாரிகள் விலங்கிடும் காட்சிகள் கொண்ட வீடியோ நேற்று முன்தினம் இரவு வைரலானது.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்தது. இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க அதிபர் ஒருவர், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இந்த விஷயத்தில் இந்தியா மீது அழுத்தம் கொடுத்ததற்காக அதிபர் டிரம்ப் பெருமைப்பட்டு வருகிறார்.
ஆனால் போர் நிறுத்தம் பற்றியோ அல்லது அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றியோ பேசுவதற்கு பிரதமர் மோடி தைரியத்தை வரவழைக்க முடியவில்லை. அமெரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்கள், மோசமான நடத்தை குறித்த விஷயத்தில் தலையிடுமாறு அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி கேட்டுக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இந்தியர்களின் கவுரவத்தை நிலைநாட்டுவதும் பிரதமரின் கடமை. எனவே இந்த விவகாரம் குறித்து டிரம்பிடம் மோடி பேச வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
ஹார்வர்டில் படித்தால் வேலையே கிடைக்காது
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததால் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு நிதி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார். அப்பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தினாலேயே மாணவர்களின் விசா ரத்து செய்யப்படும் நிலை உள்ளது. இதனால் ஹார்வர்டு பல்கலையில் படித்து முடித்த இந்திய மாணவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஒருகாலத்தில் ஹார்வர்டில் படித்தாலே வேலையில் முன்னுரிமை கொடுத்த காலம் மாறி இப்போது ஹார்வர்டில் படித்த சர்வதேச இளைஞர்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமர்த்த தயங்குவதாக இந்திய மாணவ, மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் படித்து முடித்த பின் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுவதாகவும், வெறும் கையுடன் நாடு திரும்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வருத்தத்துடன் கூறி உள்ளனர்.
வீடியோ எடுத்தவர் குமுறல்
இந்திய மாணவருக்கு நேர்ந்த கொடூரத்தை வீடியோ எடுத்தவர் இந்திய அமெரிக்க தொழிலதிபர் குணால் ஜெயின். இந்த வீடியோவை கடந்த 8ம் தேதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், ‘‘நேற்றிரவு நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் நாடு கடத்தப்படுவதை கண்டேன். அவர் கைவிலங்கிட்டு, குற்றவாளியை போல் நடத்தப்படுகிறார். அவர் தனது கனவுகளை நோக்கி இங்கு வந்தவர். அவரைப் பார்க்கையில், ஒரு என்ஆர்ஐ ஆக உதவ முடியாதவனாக, மனம் உடைந்தவனாக உணர்ந்தேன். இது ஒரு மனித கொடூரம். இந்த ஏழைக் குழந்தையின் பெற்றோருக்கு அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் அந்த நபருக்கு உதவ வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.