புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏன் குறையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை சுமார் 24 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 2014 ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 102 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.73 ஆக இருந்தது. 2024 ஆகஸ்ட் மாதம் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 78 டாலராக உள்ளது. ஆனால் இன்னும் பெட்ரோல் விலை ரூ.95 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையாமல் இருப்பது ஏன்? இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து அதிக லாபம் கிடைத்தும் கூட, அந்த பயன் நுகர்வோருக்கு கிடைக்க பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.