கெய்ரோ: செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி 4 பேர் பலியாகினர். 23 பேர் காயமடைந்தனர்.3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. எகிப்து நாட்டின் ராஸ் கரீப் துறைமுகம் அருகே செங்கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணியில் சவுதி அரேபியா நாட்டின் கப்பல் ஒன்று ஈடுபட்டிருந்தது. அந்த கப்பலில் 30 ஊழியர்கள் இருந்தனர். நேற்று முன்தினம் திடீரென கப்பல் கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். 23 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். கப்பலில் பணியாற்றிய 3 பேரை காணவில்லை.
சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒஸாமா ரபி கூறுகையில்,‘‘சூயஸ் கால்வாயின் தெற்கு நுழைவாயிலில் இருந்து 130 கடல்மைல் தொலைவில் விபத்து நிகழ்ந்தது. எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கியதால் சூயஸ் கால்வாயில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கப்பல் மூழ்கியது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார். இதுகுறித்து செங்கடல் மாகாண ஆளுநர் அமீர் ஹனாபி,‘‘ இந்த விபத்தில் மாயமான 3 ஊழியர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் எகிப்து கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.