புதுடெல்லி: ஒன்றிய ரிசர்வ் பாதுகாப்பு படையை சேர்ந்த மோதி ராம் ஜாட் என்பவரை ஒன்றிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ டெல்லியில் கைது செய்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்ட மோதி ராம் ஜாட் சி.ஆர்.பி.எப்ல் உதவி துணை ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.
பாகிஸ்தானுக்காக வேவு பார்த்த இவர், கடந்த 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டதாக என்.ஐ.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் பல்வேறு வழிகள் மூலம் பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து ஏராளமான பணம் பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த மோதி ராம் ஜாட் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றங்களில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை 12 நாட்கள் அதாவது ஜூன் 6ம் தேதி வரை என்.ஐ.ஏ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் பாகிஸ்தானுடனான மோதி ராம் ஜாட்டின் தொடர்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சி.ஆர்.பி.எப் பணியிலிருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ சி.ஆர்.பி.எப் பணியாளர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை நெருக்கமாகக் கண்காணித்ததில், மோதி ராம் ஜாட் வேவு பார்த்தது கண்டறியப்பட்டது என்றார்.