பெங்களூரு: இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் பீடி புகைத்த சிஆர்பிஎப் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறையில் இருந்து துர்நாற்றமான புகை வெளியேறியது. மேலும் அந்த கழிவறையின் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த விமானப் பணியாளர்கள், அவசர அவசரமாக அந்த கழிவறையை திறக்க முயன்றனர். அந்த கழிவறையின் உள்ளே இருந்த ஒரு பயணி, கழிப்பறைக்குள் பீடி புகைத்துக் கொண்டிருந்தார்.
விமானத்தின் பணியாளர்கள், உடனடியாக அவரிடமிருந்த தீப்பெட்டியையும், பீடி துண்டையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை அவரது இருக்கையில் அமர வைத்தனர். அந்த விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும், அந்த நபரை போலீசாரிடம் விமான பணியாளர்கள் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், கழிப்பறையில் புகைப்பிடித்த நபர், சிஆர்பிஎப் வீரர் கருணாகரன் என்பதும், சிகிச்சைக்காக பெங்களூரு வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.