உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுவது பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் தான். 18 ஆண்டுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றது வரவேற்க கூடியது என்றாலும் இதற்காக பெங்களூரு மையப்பகுதியில் ஏற்பாடு செய்த வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கோட்டைவிடப்பட்டுள்ளது. அவசரமாக வெற்றியை
கொண்டாட வேண்டிய நிர்பந்தம் என்ன?. சரியான திட்டமிடல் இல்லாமல் ஆன்லைனில் பாஸ்களை விற்பனை செய்தது, இலவச பாஸ்களை வாரி வழங்கியது. ஸ்டேடியத்தில் மொத்தம் 35 ஆயிரம் பேர் தான் அமர முடியும் என்ற நிலையில் 2 லட்சத்துக்கும் மேல் கூட்டம் கூடியது என்று கட்டுப்பாட்டை மீறியதால் எல்லாம் கை மீறி போய்விட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் இல்லை. விதானசவுதாவில் இருந்து சின்னசாமி ஸ்டேடியம் வரை வெற்றி ஊர்வலம் நடத்தப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. பிற்பகல் முதலே ஆயிரக்கணக்கில் சின்னசாமி ஸ்டேடியம், விதானசவுதா முன்பு மக்கள் திரண்டதால் போலீசார் திணறிவிட்டனர். கிரிக்கெட், சினிமா, பொது நிகழ்ச்சிகள் என்றால் தற்போது இளைஞர் பட்டாளம் ஏராளமாக கூடி விடுகின்றனர். அவர்கள் கட்டவிழ்த்து விட்டது போன்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. எனவே, மாநில அரசு போலீஸ் பாதுகாப்பை முன்கூட்டியே பலப்படுத்தி இருக்க வேண்டும்.
சம்பவம் நடந்த பிறகு இழப்பீடு, நீதி விசாரணை என்பதால் பயன் இல்லை. இச்சம்பவம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றம் சுயமாக முன்வந்து விசாரணை நடத்த இருக்கிறது. காங்கிரஸ் அரசு நிகழ்ச்சியை சரியாக திட்டமிட்டு நடத்தவில்லை. இதனால் தான் அசம்பாவிதம் நடந்துவிட்டதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. இது அரசியல் செய்யும் தருணமில்லை. எப்படியோ அசம்பாவிதம் நடந்துவிட்டது. கும்பமேளாவில் நடக்கவில்லையா என்று முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இருந்தாலும் சடலத்தின் மீது அரசியல் நடத்துவது பாஜவுக்கு கைவந்த கலை என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சாடியுள்ளார்.
இந்த அசம்பாவிதத்தில் போலீசார் பொறுப்பேற்க முன்வரவில்ைல. காரணம் காவல்துறையிடம் முன் அனுமதி பெறவில்லை என்று கூறுகின்றனர். உயிரிழந்த அப்பாவிகள் குடும்பத்தினர் நிர்கதியாகிவிட்டனர். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசும், போலீசும் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. அது முடியாவிட்டால் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பெண்கள், இளைஞர்கள் தவிர்த்துவிட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் அறிவுரையாக இருக்கிறது.