பெங்களூரு: ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதை அடுத்து கடந்த ஜூன் 4ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்ததாகவும், அரசு அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது. இந்தநிலையில், நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை, இந்த விழாவை ஏற்பாடு செய்த கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் அழைப்பின் பேரில்தான், தாம் அங்கு சென்றதாகவும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் என்னைச் சந்தித்தனர். அப்போது பாராட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். இந்த நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. கர்நாடக கிரிக்கெட் சங்கமே நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கலந்து கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால், அங்கு சென்றேன்.
ஆர்சிபி கொண்டாட்ட நிகழ்வு நெரிசலில் சிக்கி மதியம் 3.50க்கு மருத்துவமனையில் பலர் சென்றுள்ளனர். ஆனால், கூட்ட நெரிசல் நடந்து உயிரிழப்புகள் ஏற்பட்ட தகவலையே 5.45 மணிக்குதான் எனக்கு கூறினார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான தகவலை காவல்துறை என்னிடம் தெரிவிக்கவில்லை என முதலமைச்சர் சித்தராமையா கூறினார்.
மேலும் பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தை நெரிசல் மிகுந்த நகரப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆய்வு செய்யும் என சித்தராமையா கூறியுள்ளார்.