ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.8 கோடி சம்பளம் அப்படி ஒரு வேலை எனில் நாம் அதை விடுவோமா. ஆனால் அப்படி கோடிகளில் கொட்டிய வங்கி வேலையை விட்டுவிட்டு பிறருக்கு உதவி செய்வதைத் தன் நோக்கமாகக் கொண்டு செயலாற்றி வருகிறார் நிஷா ஷா. இலங்கையைப் பூர்வீகமாகத் கொண்ட லண்டனைச் சேர்ந்த வங்கியாளர் கிரெடிட் அக்ரி கோள் நிறுவனத்தில் இணை இயக்குனராக வருடத்திற்கு 256,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 7.8 கோடி சம்பளமாக பெற்றுக்கொண்டிருந்தவர். ஒன்பது வருடங்கள் அந்த வங்கிப் பணியில் தொடர்ந்து வேலை செய்தவருக்கு அதில் திருப்தி அளிக்கவில்லை என வேலையை விட்டு வெளியேறியிருக்கிறார். வேலையை விடுவதற்கு முன்பே ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கி அதில் வீடியோக்கள் பதிவிட்டு வந்திருக்கிறார் நிஷா ஷா.
தான் செய்துகொண்டிருந்த வேலை சவாலானதாகவும், அறிவை வளர்க்கக் கூடியதாகவும் இல்லை எனவும் அதனால் இந்த வேலை பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார் நிஷா. தொடர்ந்து பிறருக்கு உதவி செய்வதன் மூலம் தாமும் பொருளாதார ரீதியாக வளர வேண்டும் அதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி எனவும் முடிவெடுத்து இந்த வேலையை விட்டு வெளியேறியிருக்கிறார் நிஷா. மேலும் தான் வேலை செய்துகொண்டிருக்கும் வங்கி வேலை பெரு நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும், அரசாங்கத்துக்கும் மட்டுமே நிதிஉதவி செய்து வருகிறது. ஆனால் வெகுஜனங்களுக்கு இதனால் ஒரு பயனும் பெரிதாக இல்லை என உணர்ந்தவர் இதற்காகவே யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் வீடியோக்கள் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் நிஷாவின் யூடியூப் சேனலில் வெறும் ஆயிரம் சப்ஸ்கிரைபர்களை எட்டுவதற்கே ஒரு வருடங்கள் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 2022ல் தனது வாழ்க்கை வரலாற்றையே காணொளியாக பதிவேற்றியதின் விளைவாக அந்த வீடியோ வைரலானது. ஒரே வாரத்தில் 50,000 சப்ஸ்கிரைபர்கள் கிடைத்தனர். இதன் மூலம் யூடியூப்பில் இருந்து சிறுதொகையாக பணமும் வரத் தொடங்கியது. தொடர்ந்து முழு நேர யூடியூப்பராகவும் மாற ஆரம்பித்தார் நிஷா ஷா. அவருடைய யூடியூப் சேனலில் அத்தனையும் தனிப்பட்ட நபர்களுக்கான நிதி தொடர்பான ஆலோசனைகள் பரிந்துரைகள் வழிகள் என அனைத்தையும் தனது வங்கி வேலையில் இருந்து கிடைத்த அனுபவம் மூலம் யூடியூப்பில் வீடியோக்களாக பதிவிட தொடங்கினார். எந்த ஆலோசனையும் எதோ வீடியோ பதிவிடவே என்றில்லாமல் வாழ்க்கைக்கு உதவும் ஆலோசனை களாகவும், வழிகளாகவும் இருந்தன. இந்தச் சேனல் மூலம் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு வருடத்திற்குள் தனது வேலையின் மூலம் சம்பாதித்ததை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக சம்பாதித்தார் நிஷா ஷா.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி இந்த வருடம் மே மாதம் வரையிலும் நிஷா ஷா சம்பாதித்த தொகை ரூ. 28 கோடி. வங்கி வேலையை விடும்பொழுது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் என பலரும் நிஷா ஷா முடிவு தவறானது என அவரை விமர்சித்து குறிப்பாகத் திட்டவும் செய்திருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர் எடுத்ததுதான் சரியான முடிவு என பலரும் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி நிஷா ஷாவின் சேனலில் வேலை இருக்குமா என கேட்கும் அளவிற்கு சூழல் மாறியிருக்கிறது.
தனது அனுபவத்திலிருந்து டிஜிட்டல் உலகை பொருத்தவரை தொடர்ந்து செயலாற்றுவதுதான் மிகப்பெரிய பலம் என்கிறார் நிஷா ஷா. வாரத்திற்கு இரண்டு வீடியோக்கள் அல்லது மூன்று வீடியோக்கள் எனில் அதில் கண்டிப்புடன் செயலாற்ற வேண்டும். ஒரு நாள் தாமதம் காட்டினாலும் நமக்கான சப்ஸ்கிரைபர்கள் அடுத்த சேனலை நோக்கிச் சென்று விடுவார்கள். நேரம் தவறாமை மற்றும் நல்ல தகவல்கள்தான் யூடியூப் தளம் பொருத்தவரை மிக முக்கியம் என்கிறார் நிஷா ஷா. இப்படி சாதித்த பணத்தில் எப்போதும் தன் வங்கி மூலம் கிடைத்த ஆண்டுக்கு ரூபாய் எட்டு கோடி வருமானத்தை மட்டும்தான் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை பொருளாதார அடிப்படையில் அடித்தட்டில் இருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கிவருகிறார் நிஷா ஷா. மேலும் தன்னிடம் ஆலோசனை கேட்போர்களுக்கென தனி வாடிக்கையாளர்கள் சேவையும் வைத்து ஆலோசனைகள் கொடுக்கிறார்.
– கவின்.