சென்னை: நீரின்றி பயிர்கள் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த விவசாயிக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவிரியில், கர்நாடக மாநிலம் நீர் திறந்து விடாமல் அடாவடியாக செயல்பட்டு வருவதால், காவிரிப் பாசனப் பகுதிகளில் மூன்றரை லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் அழிந்து வருகின்றன.
திருவாரூர் மாவட்டம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். லட்சக்கணக்கில் கடன் வாங்கி பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மிகுந்த மன வேதனை அடைந்த அவர், தன் நிலத்தில் பயிர்கள் அழிவதைக் கண்டு கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் நிலத்தில் சாகுபடி செய்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் தானே அழித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு தன் நிலத்திலேயே உயிரை விட்டிருக்கிறார்.
தண்ணீர் இன்றிப் பயிர்கள் கருகியதால், கண்ணீர் விட்டு கதறிய ராஜ்குமார் உயிர் இழந்தது தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயி ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கி ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.