எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் அதில் அதிக விளைச்சலை எடுப்பதுதான் எனது வழக்கம் எனக் கூறி அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் தர்மபுரி ஒடசல்பட்டியை சேர்ந்த ராஜா. கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் நிலத்தில் 45 டன் தக்காளியை அறுவடை செய்த இவர், அதற்கு முன்பாக பீன்ஸ் பயிரிட்டு அதிலும் அதிக விளைச்சல் எடுத்து அசத்தி இருக்கிறார். தற்போது மிளகாய் பக்கம் திரும்பி இருக்கிறார். அந்தப் பகுதியில் புதிய ரக காய்கறி விதைகளை அறிமுகப்படுத்தும் கம்பெனிகள் கூட ராஜாவிடம் தங்களது விதையைக் கொடுத்து அதிக மகசூல் எடுத்து காண்பிக்கச் சொல்லும் அளவிற்கு ராஜாவின் விவசாய நுணுக்கங்கள் ரோல்மாடலாக விளங்குகிறது. இதையெல்லாம் கேள்விப்பட்டு ஒடசல்பட்டிக்கு ஒரு விசிட் அடித்தோம். தோட்டத்தில் மிளகாய் அறுவடையில் பிசியாக இருந்த ராஜா நம்மை வரவேற்றுப் பேசினார்.
“தாத்தாவும் அப்பாவும் விவசாயம் செய்த காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்தேன். அவர்களுக்கு பிறகு கடந்த 25 வருடமாக தனியாக விவசாயம் செய்து வருகிறேன். காய்கறிகளில் அனைத்து வகைகளையும் சாகுபடி செய்திருக்கிறேன். நான் எந்த பயிரை சாகுபடி செய்தாலும், அதில் அதிக விளைச்சல் எடுக்க வேண்டுமென உறுதியாக இருப்பேன். அதன்படி விளைச்சலும் அள்ளி விடுவேன். சொந்தமாக 2 ஏக்கரும், குத்தகைக்கு 2.5 ஏக்கரும் இருக்கிறது. இதில் சுழற்சி முறையில் பல வகை பயிர்களை சாகுபடி செய்கிறேன். தற்போது ஒரு ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்து வருகிறேன்’’ என்றவர் தனது மிளகாய் சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “ மிளகாயைப் பொருத்தவரை நாற்று முறை நடவுதான் சிறந்தது. அதனால், குழித்தட்டு முறையில் மிளகாய் நாற்றுகளை 30 நாட்கள் வளர்த்து அதன்பின் வயலில் நட வேண்டும். குழித்தட்டில் விதைகளை விதைத்த 30 நாட்களில் மிளகாய் நாற்றுகள் 4 இலைகள் விட்டு வளர்ந்திருக்கும்.
அதற்கிடையில், நிலத்தை நன்கு உழ வேண்டும். ஏற்கனவே பயிர் செய்து அறுவடை எடுத்த நிலத்தில் வேறு பயிரை வளர்க்கப் போகிறோமென்றால், நிலத்தை நன்கு ஆறப்போட்டு அதன் பின் உழுது தொழுவுரமிட்டு முறையாக நிலத்தை தயார் செய்ய வேண்டும். நான் அப்படித்தான் எனது நிலத்தைத் தயார் செய்தேன். அதன்பின், நிலத்தில் பார் அமைத்து, அதன் மீது மல்ச்சிங் ஷீட் விரித்து, அதற்கிடையில் மிளகாய் நாற்று களை நட்டேன். இந்த முறையில் நடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 6 ஆயிரம் நாற்றுகள் வரை தேவைப்படும். நாற்று நட்ட பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறையும், செடி வளர வளர வாரம் ஒருமுறையும் தண்ணீர் கொடுக்க வேண்டும். இந்த முறையில் வளர்க்கும்போது சரியாக 60 நாட்களில் பூ பூக்கத் தொடங்கி விடும். அடுத்த பத்து நாட்களில் ஓரிரு செடிகளில் காய்கள் வரத் தொடங்கி விடும். நாற்று நட்டு சரியாக மூன்று மாதம் கழித்து செடிகளில் இருந்து அறுவடை செய்யத் தொடங்கலாம்.
சிலர் வாரம் ஒருமுறை அறுவடை செய்வார்கள். ஆனால் நான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் அறுவடை செய்வேன். அப்போதுதான் சரியாக நிறைவான அறுவடை எடுக்க முடியும். அதற்கிடையில் காய்களின் வளர்ச்சிக்காகவும் மகசூலுக்காகவும் இயற்கை மற்றும் செயற்கை உரங்களும் கொடுத்து வருவேன். முதல் அறுவடையில் இரண்டு டன் மிளகாய் அறுவடை கிடைத்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது அறுவடையில் மூன்றரை டன் மிளகாயும், 3வது அறுவடையில் 5 டன் மிளகாயும் அறுவடை செய்தேன். இப்படியாக மிளகாய் அறுவடை தொடங்கியது முதல் மூன்று மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஆரம்பத்தில் குறைந்த மகசூல் கிடைக்கும். பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த அறுவடையில் மகசூல் அதிகரிக்கத் தொடங்கும். அதன்பிறகு கடைசியாக மகசூல் குறைய ஆரம்பிக்கும். இந்த வகையில் தற்போது வரை எனது நிலத்தில் 15 டன் மிளகாய் அறுவடை எடுத்திருக்கிறேன். இன்னும் இரண்டு, மூன்று அறுவடை செய்யலாம் என எதிர் பார்க்கிறேன். எனது தோட்டத்தில் விளைகிற மிளகாய் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்னை போன்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது’’ என மகிழ்வோடு பேசி முடித்தார் ராஜா.
தொடர்புக்கு:
ராஜா: 98659 85442.
விதைகள், உழவு, எரு, மல்ச்சிங் ஷீட், கூலி, உரம் என ஒரு ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்ய சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது. மகசூலாக கிடைக்கும் 15 டன் மிளகாயை கிலோ ரூ.16க்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.2,40,000 வருமானம் கிடைக்கிறது. இதில் செலவு போக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது. கடந்த ஆண்டில் மிளகாய்க்கு நல்ல விலை கிடைத்ததால் லாபமும் அதிகளவில் கிடைத்தது என்கிறார் ராஜா.
அனைத்துப் பயிர்களிலும் அதிகமகசூல் எடுப்பதற்கு ராஜா சில நுணுக்கங்களைத் தொடர்ச்சியாக கையாண்டு வருகிறார். நல்ல தரமான விதைகள் மூலம் நாற்று உருவாக்கம், நிலத்தை நன்றாக உழுது ஆறப்போட்டு சாகுபடியைத் தொடங்குவது, காய்கள் திரட்சியாக வர உரிய பராமரிப்புகளை மேற்கொள்வது என முறையான நுணுக்களை உரிய நேரத்தில் செயல்படுத்துகிறார்.