சென்னை: என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் கால்வாய் தோண்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறி அறுவடை வரை விவசாயிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று உத்தரவிடக் கோரியும், நிலத்தை மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சேதப்படுத்தப்பட்ட பயிருக்கான இழப்பீடு குறித்து தமிழ்நாடு அரசும், என்.எல்.சி. தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. என்.எல்.சி. தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழ்நாடு அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யும் வரை தொந்தரவு செய்யப் போவதில்லை. செப்டம்பர் 15ம் தேதிக்குள் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, இழப்பீடு போதுமானதல்ல. ஏக்கருக்கு 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நில உரிமையாளர்கள் உரிமை கோர முடியாது. அந்த நிலத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி இல்லை. அப்படி உரிமை கோரி நிலத்திற்குள் நுழைந்தால் அது அத்துமீறி நுழைந்ததாக கருதப்படும். என்.எல்.சி நிறுவனம் பல ஆண்டுகளாக நிலத்தின் உரிமையாளர்களை விவசாயம் செய்ய அனுமதித்து திடீரென்று பயிர்களை சேதப்படுத்தியதை ஏற்க முடியாது.
அதே நேரத்தில் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி அனைத்து குடிமக்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களாவார்கள். நில உரிமையாளர்களில் 88 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு தர அரசு தரப்பும், என்.எல்.சி தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே, என்.எல்.சி நிறுவனம் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரத்தை வரும் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும். சம்மந்தப்பட்ட விவசாயிகள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு தாசில்தாரை அணுகி இழப்பீடு பெற்றுக்கொள்ள வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் விவசாயம் செய்ய கூடாது. இந்த விஷயத்தில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுத்து அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். வழக்கு இறுதி தீர்ப்புக்காக 7ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.