Wednesday, April 17, 2024
Home » பயிர்களுக்குப் பலன் தரும் மீன் அமிலம்!

பயிர்களுக்குப் பலன் தரும் மீன் அமிலம்!

by Porselvi

இப்போது இயற்கை முறை விவசாயம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கலப்படமில்லாத இயற்கை இடுபொருட்களைத் தேடி வாங்குவதற்கு விவசாயிகள் சற்று சிரமப்படும் நிலையும் இருந்து வருகிறது. அதேவேளையில் பல விவசாயிகள், பல விதமான இயற்கை இடுபொருட்களை தாங்களே தயாரித்து பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மீன் அமிலத்தையும் நாம் வீட்டில் இருந்தபடியே தயாரித்து பயன்படுத்தலாம். மீன் கழிவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாக இருக்கிறது. மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைச்சத்து) நிறைந்திருக்கிறது. மீன் கழிவுகள் கிடைக்காத பட்சத்தில் முழு மீன்களையும் பயன்படுத்தலாம். எனினும் முழுமீனை விட மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கும் மீன் அமிலம் சிறப்பானப் பலனைத்தரும். மீன் அமிலத்தை எளிதாக கிடைக்கும் மீன் கழிவுகள், நாட்டுச்சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தை கொண்டு முழுக்க முழுக்க இயற்கை முறையிலேயே தயாரிக்கலாம்.

மீன் அமிலம் தயாரிக்க தேவையான பொருட்கள்

மீன் கழிவுகள் – 1 கிலோ
பனை வெல்லம் (அ) நாட்டுச்
சர்க்கரை – 1 கிலோ
கனிந்த வாழைப்பழம் – 5.

எப்படி தயாரிப்பது?

ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன், அதே அளவில் பனைவெல்லம் மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாகக் கலக்கி காற்று புகாமல் மூடி வைக்கவும். கெட்ட வாயுக்கள் வெளியேறுவதற்காக தினமும் இதனைத் திறந்து மூடவேண்டும். 40 நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் உருவாகி இருக்கும். இந்த திரவத்தில் இருந்து பழவாடை வீசும். இவ்வாறு பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம்.மேற்கண்ட முறையில் தயார் செய்யப்படும் மீன் அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.நெல் பயிருக்கு ஒற்றை நாற்று நடவாக இருந்தால் 40ம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் அமிலத்தை, 120 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். சாதாரண நடவுக்கு 25ம் நாளில் இருந்து தெளிக்கலாம். இப்படித் தெளிக்கும்போது தண்டுப்பகுதி உறுதியாக இருக்கும்.

கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15 – 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். நெல், நிலக்கடலை, எள், கேழ்வரகு, மரவள்ளி, பப்பாளி கம்பு, சோளம், தர்பூசணி, வெள்ளரி, பூச்செடிகள் என அனைத்து வகையான பயிர்களுக்கும் 150 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். மீன் அமிலம் தெளிப்பதால் விளையும் பொருட்கள் நன்கு திரட்சியாக பெருத்து நமக்கு ஆரோக்கியமான தானியங்கள், நெல், நிலக்கடலை, பூ, பழம் ஆகியவை கிடைக்கும்.

தேங்காய்க்குசுவை கூட்டும்

மீன் அமிலத்தை 30 மிலி அளவில், மரத்தின் இளம் வேர்களில் கட்டி விடுவதன் மூலம் தென்னை மரம் வறட்சிக்காலத்திலும் நன்கு பசுமையாக இருக்கும். பூ உதிர்தல், குரும்பை உதிர்தல் குறையும். தேங்காய் நல்ல சுவையுடன் பெரிய அளவில் கிடைக்கும். தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதால் அதிகமான விளைச்சலைப் பெறலாம். இதனால் கால்நடைகளுக்கு ஆரோக்கியமான பசுந்தீவனம் கிடைக்கும். ஒரு முறை தயார் செய்த மீன் அமினோ அமிலத்தை ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும்போது இதனை எடுத்துக்கொண்டு, அதன்பின் அந்த பிளாஸ்டிக் வாளியை காற்றுப் புகாமல் மூடிப் பாதுகாக்க வேண்டும்.

இவ்ளோ பயன் இருக்கு

மீன் அமிலம் பொதுவாக வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது. பயிருக்கு தழைச்சத்துத் தேவையைப் பூர்த்தி செய்ய யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். மீன் அமினோ அமிலத்தைப் பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும்போது பூக்கள் நன்றாக பூக்கும். மேலும் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற்று காய்க்கும் திறன் அதிகரிக்கும்.இந்த அமிலம் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. மீன் அமினோ அமிலம் 75 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படக் கூடியது. இதனால் பூச்சிகளின் தொல்லையும் கட்டுப்படுத்தப்படும். மீன் அமிலத்தைத் தெளிக்கும்போது பயிர்கள் நன்கு பச்சை பிடித்து செழிப்பாக வளரும்.வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு இருக்காது. இந்த திரவத்தைத் தெளித்த ஐந்து நாட்கள் வரை எந்த கவலையும் இல்லாமல் இருக்கலாம். தேவைப்பட்டால் மீண்டும் மீண்டும் தெளிக்கலாம்.மீன் அமிலத்தை கொடுக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பயன்படுத்தினால் பயிர்கள் வாடிவிடும் ஆபத்து இருக்கிறது. இதை முறையாக கடைபிடித்தால் பயிர்களைக் காத்து ஆரோக்கியமான மகசூலை அள்ளி மகிழலாம்.

You may also like

Leave a Comment

nine + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi