*கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கோவில்பட்டி : விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்து, களை பறிப்பு கூலி உயர்வை கணக்கில் கொண்டு கூட்டுறவு கடன் சங்கங்களில் சொத்து மதிப்பின்றி வழங்கப்படும் பயிர்க்கடன் அளவீடு ரூ.1.6 லட்சத்தை ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டுமென கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தென்பகுதியான ஸ்ரீவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், சாத்தான்குளம் வட்டங்களில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் விவசாயமும், கயத்தார், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் வட்டங்களில் மானாவாரி விவசாயமும் நடந்து வருகிறது. ஆற்றுப்பாசன விவசாயம் ஆண்டுக்கு இருபோகமும், மானாவாரி விவசாயம் ஆண்டுக்கு ஒருமுறை பெய்யக்கூடிய மழையை நம்பியும் செய்யப்படுகிறது. கூட்டுறவே நாட்டுயர்வு என்பதற்கேற்ப விவசாயத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களின் பங்கு மகத்தானதாகும்.
வணிக வங்கிகளில் பயிர்க்கடன் முதல் கல்விக்கடன், தொழிற் கடன் என பல்வேறு கடன்கள் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் கேட்டு கெடுபிடி செய்வதால் கிராமப்புற விவசாயிகள், தங்கள் கிராமங்களில் செயல்படும் கூட்டுறவு கடன் சங்கங்களை அதிகளவில் நாடுகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான அடி உரம் டிஏபி, மேலுரம் யூரியா கலப்புரம், காம்ப்ளக்ஸ், பொட்டாஷ் போன்ற உரங்கள் தமிழ்நாடு அரசு உரக்கிடங்கில் இருந்து வரவழைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இச்சங்கங்கள் வழங்கி வருகிறது. இவை தவிர சில கூட்டுறவு கடன் சங்கங்களில் விதைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களில் இருந்து வசதி படைத்த தொழில் முனைவோர் வரை தொழிற்கடன், ஆடு வளர்ப்பு, கறவை மாடு வளர்ப்பு, மகளிர் சுய உதவிக்குழு, கரிமூட்டத் தொழில், டிராக்டர் வாங்க, விவசாய பயிர்க்கடன் என பல்வேறு கடன்கள் எவ்வித கெடுபிடியின்றி ஆண்டுதோறும் அரசு வழிகாட்டுதல்படி இலக்கு நிர்ணயம் செய்து மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் விவசாயிகளுக்கு எவ்வித சொத்து மதிப்பு அடமானமின்றி பயிர் அடங்கல் மூலம் வழங்கப்படும் பயிர்க்கடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை கடன் அளவீடு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது. சொத்து அடமானம் பெயரில் ஏக்கர் மற்றும் பயிருக்கு தகுந்தவாறு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
மேலும் ஆண்டுதோறும் பயிர்களுக்கு கடன் அளவீடு நிர்ணயம் செய்யப்படுகிறது. எவ்வித அடமானம் இன்றி, வட்டியின்றியும் ஓராண்டுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் தொகை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என்பது விவசாய செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை என கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், விதைகள் விலை, அடி உரம் விலை, மேலுரம் விலை, பூச்சிக்கொல்லி மருந்து, களை பறிப்பு கூலி ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. இதனை கணக்கில் கொண்டு ஓராண்டுக்கு வட்டியின்றியும், எவ்வித சொத்து மதிப்பின்றியும் வழங்கப்படும் கடன் தொகை அளவீட்டை ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்தை வரும் ஆண்டில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் விவசாயிகள், விவசாய பணிகளுக்காக தனியாரிடம் வாங்கும் கடன் சுமை குறையும். கூட்டுறவு சங்கங்கள் மீதான விவசாயிகளின் உறவு பலப்படும். கூட்டுறவு கடன் சங்கங்களில் பணப்பரிமாற்றமும் அதிகரிக்கும். எனவே வரக்கூடிய நிதியாண்டு முதல் ஓராண்டுக்கு வட்டியில்லாமல் வழங்கப்படும் பயிர்க்கடன் ரூ.3 லட்சமாக அதிகரிக்க வேண்டும், என்றார்.