சென்னை: ஊடக விளம்பரத்துக்காக சிலர் தமிழ்நாடு பாடத்திட்டம் குறித்து விமர்சித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து உயர் பதவிகள் பெற்றவர்கள், நமது பாடத்திட்டம் குறித்து பெருமையாக பேசுகின்றனர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். சென்னை கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் எவர்வின் பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன் எழுதியுள்ள ‘The Heart and Art of the Teaching’ புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் ஆஸ்போர்டு பல்கலைக் கழக புத்தக வெளியீட்டு துறையின் மேலாண் இயக்குர் சுமந்தா தத்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியின் நிறுவனரும், புத்தக ஆசிரியருமான முனைவர் புருஷோத்தமன் வரவேற்று பேசினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புத்தகத்தை வெளியிட்டார். அமைச்சர் சேகர் பாபு புத்தகத்தை பெற்றுக் கொண்டு வாழ்த்திப் பேசினார்.
அப்போது அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: மாற்றத்தை ஏற்படுத்துவது கல்வி ஒன்றுதான்.
மனதின் அச்சம், மனதின் கனவு பற்றியும் இந்த நூலில் புத்தக ஆசிரியர் நிறைய குறிப்பி்டுகிறார். ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து பங்காற்றினால்தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை குறிப்பிட்டுள்ளார். நமது மாநில பாடத்திட்டம் குறித்து சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அரசுப் பள்ளிகளில் உள்ள பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதன் மூலம் பயன் பெற்று பெரிய பதவிகளில் இருக்கின்றனர். அவர்கள் கூறுகிற கருத்துதான் எங்களுக்கு முக்கியமே தவிர, மற்றவர்கள் கருத்து குறித்து எங்களுக்கு முக்கியமில்லை. ஊடகங்களில் செய்தி வரவேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படி தவறாக விமர்சனம் செய்கின்றனர். அதனால் அரசுப் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்தான் நமது மாநில பாடத்திட்டம் எவ்வளவு சிறந்தது என்பது குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும். தலைமை நீதிபதிகளே அரசுப் பள்ளிகளில் படித்து பதவிக்கு வந்துள்ளதாக பெருமையோடு பேசுகின்றனர். அரசுப் பள்ளி பாடத்திட்டம் குறித்து விமர்சனம் செய்வோர், ஊடக வெளிச்சத்துக்காக கூறுவதாகவே நான் கருதுகிறேன். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.