விழுப்புரம்: ‘பாஜவை விமர்சித்து மீம்ஸ்களை அதிகளவு பதிவிட வேண்டும்’ என அதிமுகவினருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுகவை வலுப்படுத்த கள ஆய்வு கூட்டத்தை நடத்த அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு காரணமான பாஜவை கட்சியினர் விமர்சித்து நாம் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப அணி சமூக வலைதளங்களில் பாஜவை விமர்சித்து அதிகளவில் மீம்சுகளை பதிவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக அதிமுகவினர் தெரிவித்தனர். கூட்டம் முடிந்தபின் பின் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லாத நிர்வாக கட்டமைப்பு அதிமுகவிற்கு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 69 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் அதிமுகவினர் எப்படி களப்பணியாற்றுவது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சாதனை திட்டங்களை சொல்லி நாங்கள் மக்களிடம் வாக்கு சேகரிப்போம்’ என்றார்.