Saturday, July 12, 2025
Home செய்திகள் விமர்சனங்களை கடந்து செல்லுங்கள்!

விமர்சனங்களை கடந்து செல்லுங்கள்!

by Porselvi

மனிதன் தன்னைவிட அதிக அறிவுடையவரை, திறமைமிக்கவரை, வசதிபடைத்தவரை, அதிகாரம்பெற்றவரை அவனால் சகித்துக் கொள்ள முடியாது. ஒன்றை பத்தாக்கிப் பேசுவான். இல்லாததை இருப்பதாகச் சொல்லி பீதிகிளப்புவான். எதிராளியின் வளர்ச்சி பொறுக்காமல் தன்னுடைய விமர்சனங்களால் அவரை வீழ்த்த முற்படுவான்.நீங்கள் கண்டு கொள்ளாமல் காது கொடுத்து கேட்காமல் போனாலும்,அந்த இழிவானவர்கள் பேச்சில் உடைந்து போவீர்கள்.என் மீது இவர்கள் சேற்றை வாரி இறைக்கிறார்களே, நெருப்புக் கட்டிகளை வீசுகிறார்களே என் நிம்மதி போச்சு, சந்தோஷம் போச்சு! என்று கலங்குவீர்கள். நம்பிக்கையை இழப்பீர்கள், உற்சாகம் இருக்காது, அடுத்த அடி எடுத்து வைப்பதில் தயக்கம் இருக்கும்.விமர்சனம் உங்கள் சுயமரியாதைக்குத் தீங்கு செய்யும். பழிவாங்க துடிப்பீர்கள். அந்த வகையில் இருதரப்பினரும் பழிவாங்குவதைத் தொடர்ந்தால் நேரமும், சக்தியும் வீணாகிவிடும். ஒருமுறை வாங்கிய நற்பெயரை மீண்டும் சரி செய்வது முடியாத காரியம்.

விமர்சனத்தை நேர்மறையாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை வராது. வாழ்க்கையை புரிந்துகொண்டு நடைமுறைக்கு ஏற்ப வாழ்கிறவர்கள் விமர்சனங்களில் வேதனைப்பட மாட்டார்கள். உங்கள் முதுகில் விமர்சனக் கணையைப் பாய்ச்ச யாரோ ஒருவர் உங்கள் வீட்டுக்கு வெளியிலோ,தெருமுனையிலோ, அலுவலகத்திலோ காத்திருக்கக் கூடும்.விமர்சனங்கள் உங்களை கடந்து செல்லுமாயின் போக விடுங்கள். உங்கள் வழியில் குறுக்க நிற்குமெனில் முறையாக எதிர்கொள்ளுங்கள். ஆனால் எதற்காகவும் தேங்கி நின்று விடாதீர்கள்.கலிலியோ மிகப் பெரிய விஞ்ஞானி. இயற்பியலில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர். பல புதிய கோட்பாடுகளை நிறுவியவர்.அரிஸ்டாட்டிலின் விஞ்ஞானக் குறிப்புகளில் சிலவற்றைத் தவறென்று, ஆதாரங்களுடன் அவர் நிரூபித்திருக்கிறார். வெவ்வேறு எடையுள்ள இரண்டு பொருட்களை ஒரே உயரத்தில் இருந்து விழச் செய்தால் அவை ஒரே நேரத்தில் தரைக்கு வந்து சேரும் என்று உறுதியாக கூறினார். ஆனால் கலிலியோவின் எதிர்ப்பாளர்களோ ஒரு பறவையின் சிறகும், ஒரு பீரங்கிக் குண்டும் எப்படி ஒரே நேரத்தில் கீழ்நோக்கி வந்து சேரும்? ஒரு முட்டாள் கூட இதை நம்ப மாட்டான்! என்று கேலி செய்தனர்.

ஆனால் கலிலியோ அதற்காக மனம் சோர்ந்து விடவில்லை. அக்காலத்தில் மிக உயர்ந்த கோபுரமான பைசா கோபுரத்தின் மீது கலிலியோ ஏறிச் சென்றார். உச்சியில் இருந்துகொண்டு இரண்டு வெவ்வேறு எடை உள்ள பந்துக்களை கீழே விழும்படி செய்தார். அந்த விஞ்ஞான செயல்விளக்கத்தைக் காண மக்கள் அங்கே திரளாக கூடியிருந்தனர். இரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் பூமியை வந்தடையவும் அவரை குறை கூறிய எதிர்ப்பாளர்கள் வாயடைத்து போனார்கள்.குறை பேசுகிறவர்கள் எப்படிப்பட்டவர்கள். அவர் வழக்கமாகவே குறுகிய மனம் படைத்தவர்கள் தான், தங்களுக்கு சிறப்பு சேர்க்கும் சாதனை எதையும் அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். சாதனையாளரின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கண்டு அவர்கள் பொறாமைப்படுவார்கள். பொறாமை காரணமாகவே அவர்கள் விமர்சனம் என்கிற புழுதி வாரி தூற்றிக் கொண்டே இருப்பார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சினால் சாதனையாளர்கள் இந்த உலகில் எப்படி உருவாய் இருக்க முடியும்? விமர்சனங்களை கடந்து சாதித்த இந்த சாதனை பெண்மணியை இதற்கு உதாரணமாய் சொல்லலாம்.

மலையாள நடிகர் மோகன்லால் நிகழ்ச்சி ஒன்றில் பெருந்திரளுக்கு மத்தியில் அவர் நடக்க, அவருக்கு பாதையை அமைத்து க்கொண்டே சென்றார் கறுப்பு உடை அணிந்த பெண் பவுன்சர் ஒருவர். அவருடைய வீடியோ இணையத்தில் வைரலாக, சிங்கப் பெண்ணே என சிலாகிக்கத் தொடங்கிவிட்டனர். யார் அந்த பெண். அவருடைய பெயர்அனு குஞ்மோன், ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் பவுன்சர் பணியில் மாஸ் காட்டி வருகிறார்.எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிராமட்டத்தில் பிறந்த அனு குஞ்சுமோன், பல்வேறு கஷ்டங்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் சிங்கிள் பேரன்ட் ஆன அவரது தாயால் வளர்க்கப்பட்டார். வளரும்போது கிடைத்த அனுபவங்களின் வழி வாழ்க்கையில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதில் உள்ள சிரமங்களை எதிர்கொண்டார்.அதனால், சிறு வயதிலிருந்தே அவருக்கு கிடைத்த சிறு வாய்ப்புகளை தனக்குதானே சவாலாக எடுத்து கொண்டு சரியாக பயன்படுத்தி தற்போது ஒரு புதிய துறையில் சாதித்துவருகிறார்.

கேரளாவில் போட்டோகிராபி துறை பெண்களுக்கு ஏற்ற ஒன்றாக கருதப்பட்டபோது, அத்துறையில் நுழைந்தார். திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுப்பதுடன், திரைப்படப்படப்பிடிப்பிலும், விளம்பரப் படப்பிடிப்பிலும் பணியாற்றி வந்துள்ளார். அங்கிருந்து, எதிர்பாராத திருப்பமாக பவுன்சராக மாறியது மிகவும் தற்செயலாக நடந்தது.நிகழ்ச்சி ஒன்றிற்கு போட்டோ எடுக்க சென்றபோது, அங்கிருந்த பவுன்சருடன் சிறு பிரச்னை ஏற்பட்டது. ஆனால் சீக்கிரமே அவர்களுடன் பேசிப்பழகியதில், பவுன்சர் டீமுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களின் பணியால் ஈர்க்கப்பட்டேன்.ஏற்கனவே என் உடல் அந்த பணிக்கு சரியாக இருந்ததால், சில பெண்கள்மட்டுமே தேர்ந்தெடுத்து பணிபுரிந்துகொண்டிருந்த பவுன்சர் துறையில் பணியைத் தொடர முடிவெடுத்தேன் என்கிறார் அனு.அன்றிலிருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் கொச்சியில் உள்ள பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளிலும் பவுன்சராக பணியாற்றியுள்ளார் அனு.

உடல் தகுதி என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே. உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருப்பதுடன், தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதும் நல்லது. ஆனால், அதற்கு சமமாக மனரீதியாக விழிப்புடனும் வலிமையுடனும் இருக்கவேண்டும். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் திறனும் மிக முக்கியம்.அதுபோன்று, பலமுறை அவரது மனவலிமை சோதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை நிகழ்ச்சியில் பவுன்சர் பணி செய்யும் போது, சிறு சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது அனு சூழ்நிலையை அமைதியாகக் கையாண்டுள்ளார்.எந்தவொரு முறையான புகார்களுமின்றி அப்பிரச்சினை முடிவுக்கு வந்து உள்ளது.அனு குஞ்சுமோனின் குறிப்பிடத்தக்க பயணத்தில் அவரது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மகளும் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். என்னை எங்க அம்மா தனிமனிஷியாக வளர்த்தார். ஆனால், என் அம்மா போராடுவதை பார்த்துள்ளேன். வெவ்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள எனது தாயாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்கிறார் அனு.

வாழ்க்கையில் வெற்றி பெற போராடுகிறேன். ஆனால், எந்த சூழ்நிலையையும் என்னால் கையாள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நான் வேலை செய்வதைப் பார்த்து என் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள், எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்கிறார் அனு குஞ்சுமோன்.அனுவின் லட்சியங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. அவர் ஒரு புகைப்படக் கலைஞராகவும், பவுன்சராகவும் தொடர்ந்து பணியாற்றுகிறார். அதே நேரத்தில், திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன், அதற்கான வாய்ப்புகளுக்காகவும் காத்திருக்கிறார்.ஏற்கனவே, அவர் மலையாளத் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள புதிய புகழ் அவரது கதையை வெளிச்சம் போட்டு காட்டி, பல பெண்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை, பவுன்சர் என்பது ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறை என்று சமூகத்தில் நிலவி வரும் கருத்தையும், ஒரு பெண் எப்படி பவுன்சராக பணியாற்றலாம் என்ற விமர்சனத்தையும் தகர்த்து எறிந்துள்ளார் அனு.

பல பெண்களும் தொடர்பு கொண்டு உங்கள் கதையை அறிந்தபிறகு, பவுன்சராக பணி செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாக கூறுகின்றனர். அது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் வாழ்க்கையில் போராடும் ஒரு நபர். வாழ்க்கையில் முன்னேற எனக்கு ஒரு வேலை தேவை. அது நான் ஆர்வத்துடனும் அன்புடனும் செய்யும் வேலையாக இருக்க வேண்டும்.நாம் விரும்பும் வேலையைச் செய்யும்போது,நாம் இன்னும் சிறப்பாக அந்த வேலையை செய்ய முடியும் என்று நம்புகிறேன் என்கிறார் அனு. ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார் அனு தனது மன வலிமையால் விமர்சனங்களை கடந்து சென்று, வெற்றியை வசப்படுத்தி சாதித்து வருகிறார் அனு குஞ்சுமோன்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi