சென்னை: எந்த வழக்காக இருந்தாலும் தேவையில்லாமல் குற்றவாளிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கஸ்டடி வைக்க வேண்டாம் என்றும், நேராக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அனைத்து போலீசாருக்கும் உயர் அதிகாரிகள் புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் கோயில் வளாகத்தில் தனிப்படையினர் நடத்திய விசாரணையின் போது அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி காவல்துறை டிஜிபி அனைத்து மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் அனைத்து போலீஸ் கமிஷனர்களுக்கும் தனிப்படைகளை கலைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
டிஜிபியின் உத்தரவை தொடர்ந்து, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தனது காவல் கட்டுப்பாட்டு எல்லையில் உள்ள உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவலர்களுக்கும் மைக் மூலம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மைக் 3 ஆல் ஆபீசர்ஸ்…. உங்கள் எல்லாருக்கும் தெரியும். இப்ப என்ன பரபரப்பா போயிட்டு இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே உங்களுக்கு நிறைய உத்தரவுகள் சொல்லி இருந்தேன். முக்கியமாக இரவு 7 மணிக்கு மேல் கஸ்டடி இருக்க கூடாது. அதேபோல் ஸ்பெஷல் டீம் யாரை பிடித்தாலும் அந்த உதவி கமிஷனர் கவனத்திற்கு செல்லாமல் பிடிக்க கூடாது. நீங்கள் பார்த்தீங்க, இப்போ அந்த டிஎஸ்பி சஸ்பெண்ட் மற்ற போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் உடல் ரீதியான தாக்குதல் எதுவும் இருக்க கூடாது. ஏதாவது ஒரு வழக்கில் தனிப்படைகள் அமைக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் பரிந்துரை இருக்க வேண்டும். இல்லை என்றால் காவல் நிலையத்தில் உங்களது வழக்கமான பணிகளை தான் செய்ய வேண்டும். நான் துணை கமிஷனர் ஸ்பெஷல் டீம்….. நான் உதவி கமிஷனர் ஸ்பெஷல் டீம்…. கமிஷனர் ஸ்பெஷல் டீம் என்று இனி யாரும் எங்கும் போக முடியாது. ஏதாவது ஒரு வழக்கில் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நடைமுறை உத்தரவுகளை கடைபிடிக்க வேண்டும். அதன் பிறகு தான் ஸ்பெஷல் டீம் அமைக்க வேண்டும்.
இதுவரைக்கும் அங்கீகரிக்கப்பட்டாத தனிப்படைகள் அனைத்தும் கலைக்கப்படுகிறது. அந்த ஸ்பெஷல் டீமில் இருந்த அனைவரும் காவல்நிலையத்திற்கு சென்று பணிகளை பார்க்க வேண்டும். ஏதாவது வழக்கில் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் நீங்கள் மீண்டும் ஸ்பெஷல் டீமில் இணையுங்கள். அதேபோல் ஸ்பெஷல் டீம் யாரை பிடிக்கிறீர்கள். யாரை விசாரிக்கிறிர்கள் என்று அனைத்து உதவி கமிஷனர் கவனத்துடன் தான் நடக்க வேண்டும். உதவி கமிஷனர்கள் தான் அவர்கள் காவல் எல்லையில் நடக்கும் அனைத்துக்கும் முழு பொறுப்பு. இன்ஸ்பெக்டர்கள் பார்த்துக்கொள்வார்கள். க்ரைம் டீம் தான் பார்த்துக்கொள்ளும் என்று சொல்லி போக கூடாது. கஸ்டடி என்று இருந்தால் கண்டிப்பாக இன்ஸ்பெக்டர் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும்.
அதேபோல் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் யாரையும் சூரியன் மறைவுக்கு பிறகு காவல் நிலையம் அழைத்து வர கூடாது. ரொம்ப முக்கியம்….அழைத்து வர வேண்டும் என்றால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். அங்கு அவர்களின் உடல் நிலையை பரிசோதிக்க வேண்டும். குடிபோதையில் உள்ள நபர்களை கண்டிப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்து வர கூடாது. போலீசாரிடம் தகராறு செய்பவர்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வரகூடாது. பொதுமக்கள் யாரையாவது பிடித்து அடித்தால் அந்த நபரை காவல்நிலையத்திற்கு அழைத்து வர கூடாது. இவர்கள் அனைவரையும் நேராக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
உங்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை. அதனால் போலீசார் கஸ்டடியில் கவனம் செலுத்த வேண்டாம். விசாரணை எல்லாம் அறிவியல் ரீதியாக விசாரியுங்கள். யார் எந்த பதற்றத்தில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. அவர்கள் உடலில் என்ன நோய்கள் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. இந்த விஷயத்தில் அரசு கண்டிப்புடன் கவனம் செலுத்தியுள்ளது. நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள். எனவே தேவையில்லாமல் யாரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க வேண்டாம். காவல் நிலையத்திற்கு கொண்டு வரவே வேண்டாம். எல்லாம் வழக்குகளிலும் நீங்கள் கைது செய்கிறீர்களோ இல்லையோ கண்டிப்பாக 49(எ) கொடுத்து இருக்கணும்.
இதை அனைவரும் பின்பற்ற வேண்டும். தற்போது புதிய சட்டப்படி பிஎன்எஸ்எஸ் 35 கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்கணும். அது எந்த வழக்கு இருந்தாலும் சரி..அவர்கள் ஆஜராகிறார்கள் அல்லது இல்லையோ கண்டிப்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்கள் வக்கீலுடன் நேரில் ஆஜராகட்டும். அதுபற்றி நமக்கு ஒன்றும் இல்லை. அதேபோல், கைது நடவடிக்கை 6 மணிக்குள் முடித்துவிட்டு 7 மணிக்குள் ரிமாண்ட் செய்ய வேண்டும். காவல் நிலையத்தில் கஸ்டடி வைக்க வேண்டாம். இரவு நேரத்தில் யாராவது அடித்து கொண்டாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து வர கூடாது.
நேராக மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். குடிபோதையில் போலீசாரிடம் தகராறு செய்கிறானோ ‘நோ’ நேராக மருத்துவமனையில் அனுமதியுங்கள். எல்லாம் காலையில் பார்த்துக்கொள்ளலாம். இரவு நேரத்தில் தேவையில்லாமல் குற்றவாளிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வர வேண்டாம். அதேபோல் குற்றவாளிகளை எப்படி நடத்த வேண்டும் என்று மீட்டிங்கில் சொல்லி இருக்கேன். அதை முறையாக பின்பற்ற வேண்டும். அதில் எந்தவித மாற்று கருத்துகளும் இருக்க கூடாது. இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் அனைத்து போலீசாருக்கும் உத்தரவு பிறப்பிக்கும் காணொளி வைரலாகி வருகிறது.