சென்னை: கொலை முயற்சி வழக்கில் 2 குற்றவாளிகளுக்கு விரைந்து நீதிமன்றம் மூலம் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று தந்த எம்ஜிஆர் நகர் இன்ஸ்பெக்டர் சீனிவாசனை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, வெகுமதி வழங்கினார். வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (23). இவரை, கடந்த 8.10.2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த இருவர் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இதுதொடர்பாக அப்போது வியாசர்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த சீனிவாசன், வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விக்கி (31) மற்றும் ஜெகதீஸ்வரன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தார். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். தொடர்ந்து, அவர்கள் மீது விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கு முடிவடைந்தது.
பின்னர் நீதிமன்றம் விக்கி மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தந்த, தற்போது எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சீனிவாசனை போலீஸ் கமிஷனர் அருண் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி கவுரவித்தார்.