புதுடெல்லி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடும்போது அனைத்து விதமான முழு பாதுகாப்பும் வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறோம். ” என்று தெரிவித்தார். நீதிபதிகள் கூறுகையில் ‘‘ ஒருவர் தவறான கருத்தை கூறினால் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரலாம் அல்லது அறிக்கை விட்டு அதை கருத்தோடு எதிர்க்கலாம்.
ஒரு ஸ்டான்ட்அப் கலைஞர் ஏதாவது கூறும்போது கூட உணர்வுகள் புண்படுகின்றன எனக்கூறி நாசவேலைகள் நடக்கின்றன. இதனை அனுமதிக்கவே முடியாது. இதுபோன்ற செயல்பாடுகள் எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்று தெரிவித்தனர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “நடிகர் கமல்ஹாசன் திரைப்படம் வௌியிட கர்நாடக அரசு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும். படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை மாநில அரசு கட்டுப்படுத்தி, வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் திரையிடுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.