புதுடெல்லி: ‘தேசம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது. இனியும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. அவைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்’ என ஜனாதிபதி திரவுபதி முர்மு வலியுறுத்தி உள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்தின் 77ம் ஆண்டு நிறைவு தினத்தையொட்டி, ராஷ்டிரபதி பவனில், அந்நிறுவனத்தின் செய்தி ஆசிரியர்களை நேற்று சந்தித்து பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, கொல்கத்தா பெண் டாக்டர் கொலை தொடர்பாக முதல் முறையாக தனது கருத்துக்களை தெரிவிக்கும் வகையில் சிறப்பு கட்டுரை அளித்துள்ளார்.
‘பெண்களின் பாதுகாப்பு: போதும் நிறுத்துங்கள்’ என்ற தலைப்பிலான அந்த கட்டுரையில் ஜனாதிபதி முர்மு கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதைக் கேள்விப்பட்டபோது திகைத்து, திகிலடைந்தேன். கொல்கத்தாவில் மாணவர்கள், மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தியபோது, குற்றவாளிகள் வேறு இடங்களில் சுதந்திரமாக திரிந்து கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் மழலையர் பள்ளி சிறுமிகளும் அடங்குவர். மகள்கள், சகோதரிகள் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது. தேசம் சீற்றம் அடையும். நானும் சீற்றம் அடைகிறேன்.
நமது அரசியலமைப்புச் சட்டம் பெண்கள் உட்பட அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கியது. ஆனாலும், பெண்கள் ஒவ்வொரு சிறு வெற்றிக்கும் நிறைய போராட வேண்டியுள்ளது. 2012ல் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதிர்ச்சியும் ஆத்திரமும் ஏற்பட்டது. இதே கதியை இன்னொரு நிர்பயா சந்திக்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். அதற்கான திட்டங்களை உத்திகளை வகுத்தோம். இந்த முயற்சிகள் ஓரளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், எந்தவொரு பெண்ணும் அவர் வாழக்கூடிய, வேலை செய்யக்கூடிய இடத்தில் பாதுகாப்பான நிலையை உணரும் வரையிலும் நமது பணி முடிவு பெறாது.
தேசிய தலைநகரில் நடந்த அந்த சோகத்திற்குப் பிறகு 12 ஆண்டுகளில், நாடு தழுவிய கவனத்தை ஈர்த்தது சில சம்பவங்கள் மட்டுமே என்றாலும் இதுபோன்ற எண்ணற்ற துயரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவைகளும் விரைவில் மறந்துவிடுகின்றன. இன்னொரு கொடூரமான குற்றம் நடக்கும் போது மட்டுமே நமக்கு அவை நினைவுக்கு வருகின்றன. இந்த கூட்டு மறதி, ஏற்கனவே நான் கூறிய அந்த கேவலமான மனநிலையைப் போலவே மிகவும் அருவருப்பானது.
இத்தகைய குற்றச்செயல்கள் நினைவில் இருப்பதை விட மறதி நோய் மேலோங்க விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த வக்கிரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் வகையில் விரிவான முறையில் இதனை நாம் கையாள வேண்டும்.
கடந்த காலத்தில் நமது தோல்விகளை நினைவுபடுத்தவும், எதிர்காலத்தில் இன்னும் விழிப்புடன் இருக்க நம்மை தயார்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் ஒரு சமூக கலாச்சாரத்தை வளர்ப்பதன் மூலம் இதைச் செய்ய முடியும். அச்சத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான பாதையில் இருந்து தடைகளை நீக்குவதற்கு நாங்கள் எங்கள் மகள்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். அடுத்த ரக்ஷா பந்தனில் அந்தக் குழந்தைகளின் அப்பாவித்தனமான கேள்விக்கு நாம் கூட்டாக ஒரு உறுதியான பதிலைக் கொடுக்கலாம். தேசம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. முடிவு கட்ட வேண்டும். போதும், நிறுத்துங்கள் என்று கூட்டாகச் சொல்வோம். இவ்வாறு கூறி உள்ளார்.
* ஊடகங்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும்
செய்தி ஆசிரியர்களுடன் பேசிய ஜனாதிபதி முர்மு, ‘‘ஊடகங்கள் அச்சமின்றி செயல்பட வேண்டும். ஒருபோதும் உண்மையில் இருந்து விலகக் கூடாது. நாட்டையும் சமூகத்தையும் மேம்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடாது. நீங்கள் மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும்’’ என்றார்.