தென்காசி: குற்றாலத்திற்கு வந்த 8 மாநிலங்களைச் சேர்ந்த வீல் சேர் கிரிக்கெட் வீரர்கள், போலீசாரின் சிறப்பு ஏற்பாட்டால் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்த வீல் சேர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் தூத்துக்குடியில் நடந்தது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளான 130 கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு நாளில் குற்றாலத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
குற்றாலம் மெயினருவிக்கு வந்த வீரர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அரவணைத்து சுற்றுலா பயணிகள் கூட்டத்தை சிறிது நேரம் கட்டுப்படுத்தி மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை மகிழ்ச்சியாக குளிக்க வைத்து அனுப்பினர். பல மாநிலங்களிலிருந்தும் வந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் தங்களின் குறைகள் தெரியாத அளவிற்கு போலீசார் தகுந்த ஏற்பாடுகளை செய்து தங்களை அருவியில் குளிக்க வைத்ததாகவும், இது தங்களுக்கு புது அனுபவமாக இருந்ததாகவும், தாங்கள் ஊர் திரும்பியதும் குற்றால குளியல் குறித்து அங்குள்ளவர்களிடம் தெரிவித்து அவர்களையும் இங்கு வர வைப்போம் என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.
குற்றாலம் மெயினருவியில் எந்த சமயத்தில் மாற்றுத்திறனாளி சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் போலீசார் அவர்களை அரவணைத்து கண்ணியமாக அழைத்துச் சென்று அருவியில் குளிக்க வைத்து அனுப்பி வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.