லக்னோ: இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.பி., பிரியா சரோஜை திருமணம் செய்ய உள்ள தேதியை பல்வேறு ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் வாரணாசியில் பிரமாண்டமாக நடைபெற உள்ள திருமணத்தில் இருவரும் தங்களது வாழ்வின் அடுத்தகட்ட பயணத்தை தொடங்க உள்ளனர். திருமணம் தொடர்பான பேச்சு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அப்போது பேசிய பிரியா சரோஜின் தந்தை, ரிங்கு சிங்கின் தந்தை உடன் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியதாக விளக்கினார்.
வரும் நவம்பர் 18ம் தேதி வாரணாசியில் ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கான மோதிரம் மாற்றிக்கொள்ளும் நிச்சயதார்த்த நிகழ்வு வரும் 8ம் தேதி லக்னோவில் உள்ள ஸ்டார் ஓட்டலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான துஃபானி சரோஜினியின் மகள் பிரியா சரோஜ், வாரணாசியில் உள்ள கார்கியோன் கிராமத்தில் பிறந்தார்.
பல வருடங்களாக சமாஜ்வாதி கட்சி வாயிலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மச்சிலிஷர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உச்சநீதிமன்ற வழக்கறிஞரான பிரியா, கடந்த 2022ம் ஆண்டு தனது தந்தைக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தலில் பரப்புரை மேற்கொண்டு கவனம் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.