திருவட்டார்: குமரி மாவட்டம் திருவட்டார் அருகே அருவிக்கரை பகுதியில் பரளியாறு பாய்ந்து செல்கிறது. அந்த பரளியாற்றில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளிக்க வந்திருந்தார். அவர் தனது நண்பர்களுடன் குளிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்தார். ஆபத்தான பகுதியில் நண்பர்கள் புடைசூழ அஸ்வின் குளிக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக அருவிக்கரை அழகை படம்பிடிப்பதற்காக கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யூடியூபர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அதிகளவில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அருவிக்கரை பகுதியில் பாறைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த பாறைகளில் சறுக்கல் அதிகம். இதனால் பல விபத்துகள் நடந்துள்ளன. வருடந்தோறும் 10 பேராவது வெளியூர் சுற்றுலாப் பயணிகள் சறுக்கி விழுந்து உயிரிழந்து வருகின்றனர். மிகவும் ஆபத்தான பகுதி என்பதால் படம்பிடிக்க வரும் யூடியூபர்கள் ஆபத்தான பாறைகளில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.