Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கிரியேட்டிவிட்டி இருந்தால் ரெசின் ஆர்ட் துறையில் ஜெயிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

“எனக்கு சிறு வயதிலிருந்தே கிரியேட்டிவிட்டி கொஞ்சம் அதிகம். நடனம், பாடல், விளையாட்டு என எந்தக் கலை நிகழ்ச்சிகள் வந்தாலும் என் அம்மா என்னை ஊக்கப்படுத்தி அவற்றில் பங்கேற்க சொல்லுவார். ரெசின் ஆர்ட் செய்ய தொடங்கியதும் கிரியேட்டிவிட்டி ஆர்வத்தில்தான்” என்கிறார் தி ப்ராண்ட் சீசன் (the brand season) நிறுவனத்தின் நிறுவனர் ஹரிணி முகிலன்.நினைவுகள் என்றாலே அது ஸ்பெஷல் தான்.

அதுவும் அதை ஒரு பொருளாக மாற்றி அதை நம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்படி வைத்தால், பார்க்கும்போதெல்லாம் மனம் உற்சாகத்தில் துள்ளும். நினைவுப் பொருட்களை பாதுகாத்து பதப்படுத்தி வைக்கும் ஒரு முறைதான் ரெசின் ஆர்ட். திருமணத்திற்குப் பிறகு இந்த ரெசின் ஆர்ட் துறையை தேர்ந்தெடுத்த ஹரிணி, அவரின் வெற்றிக்கதையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

“நான் படித்தது கம்ப்யூட்டர் சயின்ஸ். ஆனால் மாடலிங் செய்வதில் ஆர்வம் இருந்ததால் படிக்கும்போதே மாடலிங் செய்து வந்தேன். படித்து முடித்ததும் திருமணம். எங்களுடையது காதல் திருமணம் என்பதால், திருமணத்திற்குப் பிறகு என்னால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால் என் கணவர் தான் எனக்கு பக்க பலமாக இருந்தார். காரணம், எனக்கு ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் இருந்தது. அந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து என்னை இன்று வரை ஊக்கமளித்து வருபவர் என் கணவர்தான். அவரின் ஊக்கம்தான் என்னை தி ப்ராண்ட் சீசன் (the brand season) என்ற பெயரில் ரெசின் ஆர்ட்டினை ஆரம்பிக்க உதவியது.

நான் ரெசின் ஆர்ட் கற்றுக்கொள்ள முக்கிய காரணம் என் திருமண மாலையை பத்திரப்படுத்த நினைத்தேன். இதன் மூலம் எனக்குள் இருக்கும் கிரியேட்டிவிட்டியை வெளிக்காட்ட நினைத்தேன். நான் அந்தக் கலையை கற்றுக் கொள்ளும் ேபாதுதான் எனக்காக மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் இதை செய்து ஒரு தொழிலாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. என் விருப்பத்தை கணவரிடம் சொன்னதும் அவரும் எனக்கு சப்போர்ட் செய்தார். இதன் பின்னர்தான் ரெசின் ஆர்ட் செய்ய தொடங்கினேன்.

முதல் ஆர்டரை நான் செய்து முடித்த போது எனக்குள் அளவில்லாத சந்ேதாஷம் ஏற்பட்டது. காரணம், ஒருவரின் வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கக்கூடிய நினைவுப்பொருள் என்பது ரொம்பவும் பொக்கிஷமானது. அதை என் கைகளால் செய்து கொடுத்தேன் என நினைக்கும்போதே மனசுக்கு நிறைவாக இருந்தது” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னவர், ரெசின் ஆர்ட் குறித்து எடுத்துரைத்தார்.

‘‘ஆரம்பத்தில் ரெசின் ஆர்ட் வெளிநாடுகளில்தான் பிரபலமாக இருந்தது. பின்னர் இந்தியாவிலும் பரவலானது. ஒரு பொருளை ரெசின் ஆர்ட் மூலம் பத்திரப்படுத்தி வைப்பதன் மூலம் அந்தப் பொருள் நீண்ட காலத்துக்கும் எந்த பாதிப்புமின்றி அழியாமல் அப்படியே இருக்கும். இதில் நினைவுப் பொருட்கள் மட்டுமில்லாமல் சுவர் கடிகாரம், கைக்கடிகாரம், நகைகள் என பரிசுப் பொருட்களையும் செய்யலாம்.

பலர் தங்களின் திருமண மாலையில் உள்ள பூக்கள், தாய்ப்பால், தலைமுடி, கண் இமை, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி, குழந்தையின் பற்கள் போன்றவற்றை பதப்படுத்தி செய்து தரச்சொல்வார்கள். சிலர் தாய்ப்பால் கொண்டு இதனை செய்யச் சொல்லிக் கேட்பார்கள். அவ்வாறு செய்யும் போது அவர்கள் கேட்கும் கேள்வி, தாய்பால் கெட்டுப்போகாதா என்பதுதான். அதனை முறையாக பதப்படுத்தினால் காலத்திற்கும் அழியாமல் அப்படியே இருக்கும்.

நான் இந்தத் ெதாழிலை ஆரம்பித்த ேபாது, பொதுவான டிசைன்களைதான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அதில் திருப்தியில்லை. புதிதாக சில விஷயங்களை ரெசின் ஆர்ட்டுக்குள் கொண்டுவர நினைத்தேன். கடிகாரங்களில் தீம்களின் அடிப்படையில் நிறங்களின் கலவையை பயன்படுத்தி அவற்றை செய்யத் தொடங்கினேன். முதலில் ஆல்பன்லீபே மிட்டாய் நிறக்கலவையை மையமாக வைத்து ரெசின் ஆர்ட் கடிகாரம் ஒன்று செய்தேன். அதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தபோது அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

அதேபோல வாடிக்கையாளர்களின் விருப்பமான தீம்களில் தொடர்ந்து கடிகாரங்களை செய்து கொடுத்தேன். இதை போன்று கண் இமைகளை வைத்து பட்டாம்பூச்சி வடிவத்திலும், தலை

முடியை வைத்து ஹார்ட்டின் டிசைன்களும் செய்து கொடுத்தேன். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தலைமுடியை வைத்து பெயர்களின் முதலெழுத்துக்களை உருவாக்கியதுதான் நான் செய்த ரெசின் ஆர்ட்டில் வித்தியாசமானது” என்ற ஹரிணி, ரெசின் ஆர்ட் தொழிலில் உள்ள சவால்களையும் விளக்கினார். “ரெசின் ஆர்ட் செய்யும்போது பெரிய அளவுள்ள பொருட்களை கொஞ்சம் எளிதாக செய்துவிடலாம். ஆனால் சின்னச் சின்ன கண் இமை, தலைமுடி போன்றவற்றை வைத்து டிசைன்களாக மாற்றுவது கொஞ்சம் சவாலானதாக இருக்கும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து தாய்ப்பால் வந்ததுமே உடனே முறையாக பதப்படுத்த வேண்டும். சின்னச் சின்ன பொருட்களை வைத்து ரெசின் ஆர்ட் செய்பவர்கள் குறைவுதான். ஆனால் இது சவாலானதாக இருந்தாலும் அதனைக் கொண்டு நினைவுச் சின்னங்களாக செய்து கொடுக்கும் போது மனசுக்கு அவ்வளவு நிறைவாக இருக்கும். அப்போது ஏற்படும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தக் கலையினை செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களின் விலை அதிகமாக இருந்தாலும் அதன் தரம் திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக ரெசின் தரமாக இருந்தால்தான் பொருளும் பார்க்க நன்றாக இருக்கும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நானே ரெசின் ஆர்ட்டுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன். அதனை தற்போது விற்பனையும் செய்து வருகிறேன். இந்த முயற்சிக்கு என் கணவர்தான் முழு காரணம். அவர்தான் இந்த ஐடியாவை எனக்கு கொடுத்தார். ரெசின் ஆர்ட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லோருக்கும் நியாயமான விலையிலும் தரமாகவும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தொடங்கினோம்.

அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றவர், இந்தத் ெதாழில் மூலம் அவர் சந்தித்த முன்னேற்றத்தை பகிர்ந்தார். “நான் இந்தக் கலை சார்ந்த பொருட்கள் மட்டுமில்லாமல், மற்றவர்களுக்கும் வர்க் ஷாப் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன். பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் வழங்குவதால், பலர் கற்றுக்கொள்ள முன் வருகிறார்கள். ரெசின் ஆர்ட்டிஸ்டாக ஆரம்பித்த இந்தத் தொழிலில் தற்போது அதற்கான மூலப் பொருட்களை தயாரிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறேன். என்னுடைய இந்த வளர்ச்சிக்கு என் குடும்பத்தினர்தான் முக்கிய காரணம்.

அவர்கள் கொடுத்த ஊக்கத்தால்தான் என்னால் இதில் வளர்ச்சி அடைய முடிந்தது. திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சாதிக்க முடியாது என்ற எண்ணம் உள்ள பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், உங்களைச் சுற்றி எந்த தடைகள் வந்தாலும் நீங்கள் செய்ய நினைப்பதை செய்யுங்கள். நீங்கள் முன்னேற முயற்சிக்கிறீர்கள் என்று தெரிந்தால் கண்டிப்பாக வீட்டில் உள்ளவர்களும் உங்களுக்கு உதவ முன் வருவார்கள்’’ என்றார் ஹரிணி.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்