*கனிமொழி எம்பி பேச்சு வார்த்தை
தூத்துக்குடி :தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்தவர் பாரத்(40). இவர் தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து எகிப்து நாட்டுக்கு செல்ல இருந்த கியானா என்ற கப்பல் 4வது கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் கிரேன் மூலம் பாரத் நிலக்கரியை ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கப்பலில் உள்ள கிரேன் உடைந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்து மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கப்பலின் ஏஜென்ட் நிறுவனம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரத்தின் உறவினர்கள் தூத்துக்குடி தருவை மைதானம் அருகே ஜார்ஜ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, தாசில்தார் பிரபாகரன், டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கனிமொழி எம்பி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரண உதவிகள் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார்.