திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம் அடைந்தன. சின்ன சிவகாசி என்று அழைக்கப்படும் வலங்கைமானில் 12 பட்டாசு உற்பத்தி கடைகள் மற்றும் 48 விற்பனை கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே ஆன்லைன் வழியாகவும் நேரடியாகவும் பட்டாசுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள செந்தில் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடைக்கு பின்புறம் உள்ள வைக்கோல் போரில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் இன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வெடிவிபத்து தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பட்டாசு இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வெடி விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் சேதம் அடைந்தன. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை போன்று பல இடங்களில் பாதுகாப்பு இன்றி பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பதை அடுத்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.