டெல்லி: பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.
பட்டாசு ஆலை விபத்து:
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்துள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வெடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில் இடிபாடுகளில் மேலும் 5 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? என தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பட்டாசு குடோன் உரிமையாளர் ரவி, மனைவி ஜெயஸ்ரீ, மகள் ரித்திகா, மகன் ரித்திஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.