*வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
திருப்பூர் : விரிசலுடன் காணப்படும் வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களும் பல செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வேலை நிமித்தமாக பலரும் சென்று வருவதால் திருப்பூரில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாநகரில் அனைத்து சாலைகளிலும் அணிவகுத்து சென்று கொண்டிருக்கும். இதனால் எப்போதும் திருப்பூர் பரபரப்பாகவே காணப்படும். இப்படிப்பட்ட சாலைகளில் திருப்பூர் கல்லூரி சாலையானது மாநகரின் பிரதான போக்குவரத்து சாலையாக உள்ளது.
அவிநாசியில் இருந்து திருப்பூர் வருபவர்களுக்கும், அதேபோல் திருப்பூரில் இருந்து அவிநாசி செல்ல நினைப்பவர்களுக்கும், மங்கலம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கும் பிரதான பகுதியாக இருக்கிறது. இதனால் வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இப்படிப்பட்ட இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனம் செல்லும் போது பாலம் இடிந்து விழுவதுபோல் அதிர்வுகளும் ஏற்பட்டு வருகிறது.
பாலத்தின் விரிசலில் உள்ள வெளியில் நீட்டி கொண்டிருக்கும் காங்கிரீட் கம்பிகளில் இருசக்கர வாகனம் டயர் மாட்டிக் கொள்வது அதிக அளவில் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுபவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த சாலை பல்லடத்தில் இருந்து அவிநாசி செல்வதற்கு முக்கிய சாலை ஆகும். எனவே, இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு சுமார் 20 ஆண்டுகள் இருக்கும். ஆனால் பாலம் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உள்ளது.
மேம்பாலத்தின் கான்கிரீட் தளங்களுக்கு இடையிலான இணைப்பு கம்பிகள் பெயர்ந்து விரிசல் அதிகமாக ஆழமாக காணப்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழல் உள்ளது. அதேபோல் இருசக்கர வாகனங்களின் சக்கரங்கள் பள்ளத்தில் சிக்கி பாதிப்பை சந்திக்கின்றன.
நாள்தோறும் பல்வேறு தேவைகளுக்காக பல்லாயிரக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் இந்த ரயில்வே மேம்பாலத்தை உரிய முறையில் பராமரித்தால் மட்டுமே, இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதியாக பயன்படுத்த முடியும்.
ஏற்கனவே வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும்போது, பாலம் அளவுக்கதிகமான நிலையில் அதிர்வு ஏற்படுகிறது. சரக்கு வாகனங்கள் சென்றால் இருசக்கர வாகனங்கள் தள்ளாடும் ஒரு நிலைக்கு செல்கிறது. பாலத்தை முறையாக பராமரித்து, வாகன ஓட்டிகளின் பயத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.