திருப்பூர்: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியை திறந்து வைத்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஆளுநர் நிகழ்ச்சி துவங்கும் போது தேசிய கீதம் பாடப்பட வேண்டும். அதன்பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். மீண்டும் ஆளுநர் உரை முடிந்த பின்னர் தேசிய கீதம் பாட வேண்டும். இது தான் இந்தியா முழுவதும் இருக்கும் நடைமுறை. தமிழகத்திற்கு மட்டும் விதி விலக்கு கிடையாது. இதனை உணர்ந்து கொண்டால் நல்லது. ஆர்.சி.பி. வெற்றி கொண்டாட்டத்தில் உடுமலையை சேர்ந்த காமாட்சி என்ற இளம்பெண் பலியாகி உள்ளார். அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் நாம் அந்த பெண்ணை இழந்துள்ளோம்.
இதில், இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எவ்வளவு கூட்டம் இருந்தாலும், நாம் பொறுமை காக்க வேண்டும். எத்தனை போலீசார் இருந்தாலும், பொதுமக்கள் நெருங்கும் போது அதனை கட்டுப்படுத்த இயலுமா?. வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மன நிலையில் மாற்றம் அடையாமல் இருக்க வேண்டும். வெற்றியை கொண்டாடும் போது கூட நிதானமாக இருக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினரின் மனநிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு நொடி மகிழ்ச்சிக்காக நாம் உயிர்களை இழக்கலாமா?, செனாப் நதி மீது கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய பாலம் ராணுவத்தினர் மிக எளிதாக எல்லை பகுதிகளை சென்றடைய உதவும். இது நமது பொறியியல் வளர்ச்சிக்கு சிறந்த சான்று. இவ்வாறு அவர் கூறினார்.