கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையை மார்க்சிஸ்ட், பாஜகவினர் சூறையாடினர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் கடந்த சில தினங்களுக்கு முன், பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் புகுந்த சிலர், அங்கிருந்த மருத்துவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் தாக்கப்பட்டனர். சிசிடிவி கேமராக்கள், நாற்காலிகள், மேஜைகள், கதவுகள், அவசர மருத்துவ உபகரணங்கள் உடைக்கப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களில் 10 பேரை வரும் 22ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி; கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையை மார்க்சிஸ்ட், பாஜகவினர் சூறையாடினர். நள்ளிரவு 12 மணியளவில் மருத்துவமனைக்குள் புகுந்து சூறையாடினர்.
இதனை இருவரும் இணைந்துதான் செய்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், மருத்துவமனையை தாக்கியவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வெளிநபர்கள், நான் பல விடியோக்களைப் பார்த்தேன், சிலர் தேசியக் கொடியையும் சிலர் வெள்ளை மற்றும் சிவப்புக் கொடிகைளையும் பிடித்திருந்தனர். மணிப்பூரில் சம்பவம் நடந்தபோது பாஜக மற்றும் சிபிஎம் எத்தனை அணிகளை அனுப்பியது? ஹத்ராஸ், உன்னாவ்வுக்கு எத்தனை அணிகள் அனுப்பப்பட்டன?மக்களுக்காக நான் உழைக்கிறேன்; மார்க்சிஸ்ட், பாஜகவினர் என்னை மிரட்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.