கறவை மாடு ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 30 கிலோ பசுந்தீவனம், 5 கிலோ வைக்கோல், ஒன்றரை கிலோ அடர் தீவனம் மிக அவசியம். அதிலும் பால் கறந்து கொண்டிருக்கும் மாடுகளுக்கு அதன் எடைக்கு ஏற்ப தீவன அளவு மாறுபடும். கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் பசுந்தீவனம் பெரும்பகுதியாக இருந்தால், ஆரோக்கியமாக, நல்ல கறவைத்திறனுடனும் இருக்கும். எனவே பசுந்தீவன சாகுபடி கறவை மாடு வளர்ப்புக்கு மிக மிக அவசியம். இத்தகைய பசுந்தீவனங்களில் முயல் மசால், கொழுக்கட்டை புல் ஆகியவை மாடுகளுக்குத் தேவையான புரதச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. இவற்றை கால்நடை வளர்ப்பாளர்கள் சாகுபடி செய்து கறவை மாடுகளுக்கு வழங்கலாம் என்கிறார் திருச்சி வேளாண்துறை இணை இயக்குநர் முருகேசன். முயல் மசால் மற்றும் கொழுக்கட்டைப்புல் சாகுபடி குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
முயல் மசால் சாகுபடி தொழில்நுட்பம்
முயல் மசால் தென்னிந்திய தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பயறுவகை தீவனமாகும். வறட்சியைத் தாங்கி வளரும். ஆண்டு மழை அளவு 450-840 மி.மீ. என்ற அளவில் இருந்தால் போதுமானது. அனைத்து மண் வகைகளிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. புரதத்தின் அளவு 15 சதவீதம் முதல் 18 சதவீதம் இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருமழை காலம் விதைப்புக்கு ஏற்றது. இதில் ‘ஸ்டையோசான்தஸ் ஹெமேடா’ என்ற இனம் ஒரு வருடப் பயிராகும். ‘ஸ்டைலோசான்தஸ் ஸ்கேப்ரா’ என்ற இனம் பல்லாண்டு பயிராகும். ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவைப்படும். விதைகளை நேர்க்கோடுகளில் 30க்கு 15 என்ற அளவில் 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். இது மானாவாரி பயிர் என்பதால் முன் வளர்ச்சி பருவத்தில் தேவையான ஈரப்பதம் இருக்க வேண்டும். களை கட்டுப்பாடு அவசியம். விதைத்ததில் இருந்து பூக்கும் தருவாயான 75ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். அடுத்தடுத்த அறுவடைகள் பயிர் வளர்ச்சியை பொருத்து செய்ய வேண்டும். முதல் இரண்டு அறுவடைகளின்போது பயிர் வளர்ச்சி குறைவாக இருப்பதால் மகசூல் குறைவாகவே இருக்கும். இருப்பினும் நாளடைவில் விதை உதிர்ந்து முளைக்கத் துவங்கி, பயிர் நன்கு வளர்ந்து எக்டேருக்கு 30 முதல் 35 டன் வரை அறுவடை செய்ய முடியும்.
விதைப்புக்கு முன்னர் ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் அல்லது கம்போஸ்ட் இட்டு உழவு செய்ய வேண்டும். மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உரமிடுதல் நலம். இதனால் தேவையற்ற உர செலவு மிச்சமாகும். மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டேருக்கு 20:60:15 கிலோ அளவில் தழை, மணி, சாம்பல் சத்து அடியுரம் அளிக்க வேண்டும். ஏக்கருக்கு 6 கிலோ விதை தேவை. முயல் மசால் விதை உறை கடினமானது. எனவே விதைகளை தூவி விதைக்கும்போது, அவற்றை அடர் கந்தக அமிலத்தில் மூன்று நிமிடம் ஊறவைத்து, பின்னர் விதைகளை நன்கு கழுவிவிட்டு, இரவு முழுவதும் நீரில் ஊறவிட வேண்டும். இதனால் விதையின் முளைப்புத்திறன் கூடும்.
கொழுக்கட்டைப்புல்
இது கோ-1 என்ற ரகத்தை சேர்ந்தது. இது வடகிழக்கு பருவமழை காலங்களுக்கு ஏற்றது. இதற்கு வடிகால் வசதியுடைய நிலம், சுண்ணாம்பு சத்து மிகுந்த நிலம் ஏற்றது. களர், உவர் நிலங்களிலும் நன்றாக செழித்து வளரும். விதைப்புக்கு முன்னர் 2 அல்லது 3 உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும். ஒரு எக்டேருக்கு 40 ஆயிரம் வேர்க்கரணைகள் அல்லது 6 முதல் 8 கிலோ வேர்க்கரணைகள் தேவை. இதனை 50க்கு 30 செமீ இடைவெளியில் விதைக்க வேண்டும். முதல் அறுவடை 70 முதல் 75 நாளில் துவங்கலாம். அடுத்தடுத்து 4ல் இருந்து 6 அறுவடைகள் வளர்ச்சியைப் பொருத்து செய்ய வேண்டும். அறுவடைக்கு பதிலாக கால்நடைகளை நேரடியாக வயலில் மேய்க்கவும் செய்யலாம். ஆண்டுக்கு 4 முதல் 8 அறுவடைகளில் எக்டேருக்கு 40 டன் பசுந்தீவனம் கிடைக்கும். வறட்சியைத் தாங்கவல்லது.
எக்டேருக்கு 5 டன் தொழுவுரம் தேவைப்படும். மண் பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் உரமிட வேண்டும். மண் பரிசோதனை செய்யவில்லை எனில் எக்டேருக்கு 25:40:20 கிலோ என்ற அளவில் தலை, மணி சாம்பல் சத்துக்கள் இட வேண்டும். இதை விதைப்புக்கு முன் அடியுரமாக முழுவதையும் இட வேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் எக்டேருக்கு 25 கிலோ தழைச்சத்து இட வேண்டும். ஒரு எக்டேருக்கு 40 ஆயிரம் வேர் கரணைகள் அல்லது 6 முதல் 8 கிலோ வேர்க்கரணைகள் தேவை. புதிய விதைகளுக்கு 6 முதல் 8 மாதம் வரை விதை உறக்கம் உண்டு. எனவே விதை உறக்கத்தை தவிர்க்க விதைப்புக்கு 48 மணி நேரம் முன்பாக விதை கரணைகளை ஒரு சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் ஊறவிட வேண்டும்.மானாவாரியில் கொழுக்கட்டைப் புல்லுடன் முயல் மசாலை 3:1 என்ற வீதத்திலும், கொழுக்கட்டை புல்லுடன் முயல் மசாலை 3:1 என்ற வீதத்திலும் கலந்து கலப்புப் பயிராகவும் பயிரிடலாம்.